நான் நகரங்களை பெரிதாக விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.
அதில் முதன்மையானது, நகரங்களின் சுரண்டல். நகரங்கள் தமக்கான எதையும் உற்பத்தி செய்வதில்லை. தேவையான அனைத்து பொருட்களும் வேறு எங்கிருந்தோ வருகின்றன. வேறு எங்கோ ஒரு வயலில் விளைந்த உணவு நகரத்திற்கு பெரிய அளவில் வருகிறது. வேறு யாருக்கோ உரிமையுள்ள நீர் ராட்சச மோட்டார்களின் மூலம் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் நகரத்து வீடுகளுக்கு வருகிறது.
ஒரு நகரம் தொடர்ந்து வாழ அதன் வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். வரி வருவாய் அதிகரிக்க அதிக மக்கள் நகரங்களுக்கு வர வேண்டும். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்கள் விரிவடைய வேண்டும். இந்த விரிவாக்கம் அடிப்படை கட்டுமானங்களான காடுகள், நீர்நிலைகள், வேளாண் நிலங்களை அழித்தே உருவாகிறது.
சில நூற்றாண்டுகளாக இந்த விரிவாக்கத்தை மிக விரைவாக நடத்தி வருவது எளிதில் கிடைக்கும் ஆற்றல் மிகுந்த படிம எரிபொருட்கள் மற்றும் கான்கிரீட்.
கான்கிரீட் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டு மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருள். புவியில் நீருக்கு அடுத்தபடியாக நுகரப்படும் பொருளாக கான்கிரீட் உள்ளது.
கான்கிரீட் என்பது மணல், சிறு கற்கள், சிமெண்ட் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும். சில நேரங்களில் எஃகு வலுவூட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கான்கிரீட்டின் சுற்றுச்சூழல் தாக்கம் அதன் உற்பத்தி மற்றும் பயன்பாடு மூலம் மிக அதிகமாக உள்ளது. ஒரு 1 கிலோ சிமெண்ட் உற்பத்தி கிட்டத்தட்ட 900 கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.
உலகளவில் CO2 வெளியேற்றத்தில் 8% சிமென்ட் உற்பத்தியில் இருந்து வெளியாகிறது. சுண்ணாம்புக்கல் குவாரி மற்றும் குவாரிக்கான நிலப்பரப்பு மாற்றத்தால் ஏற்படும் உமிழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில் சேர்க்கப்படவில்லை. கூகிள் மேப்பில் அரியலூர் எனத் தேடினால் இதன் தாக்கம் புரியும்.
கான்கிரீட் வெப்பத்தை அதிக அளவில் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. நேரடி சூரிய ஒளியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி, வெப்பத்தை சேமித்து மெதுவாக வெளியிடும் திறன் கான்கிரீட்டிற்கு உண்டு. பகலில், சூரியனின் ஆற்றலில் 95% வரை உறிஞ்சும் கான்கிரீட் மெதுவாக சுற்றியுள்ள வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. வெப்பமானி 38°C (100°F) காட்டும் நாட்களில், இந்த வெப்பநிலையானது மேற்பரப்பிலிருந்து ஒரு மீட்டருக்கு மேல் (பல அடிகள்) காற்றின் வெப்பநிலையைக் குறிக்கிறது. இருப்பினும், அந்த வெப்பநிலையில் கான்கிரீட் மேற்பரப்புகள் 65 ° C (149 ° F) க்கும் அதிகமான வெப்பநிலையை எட்டும்.
நகர்ப்புற வளர்ச்சி நிலப்பரப்பை வெகுவாக மாற்றுகிறது. இயற்கை மேற்பரப்புகள் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் போன்ற ஊடுருவ முடியாத கட்டமைப்புகளால் மாற்றப்படுகின்றன.
கான்கிரீட்டின் வெப்பத்தேக்க திறனாலும், செங்குத்தான உயர்ந்த கட்டிடங்களின் அடர்த்தியாலும் நகர்ப்புற வெப்ப தீவுகள் உருவாகிறது. இவை அருகிலுள்ள கிராமப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக வெப்பநிலையை அனுபவிக்கும் பகுதிகள் ஆகும்.
1 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரத்தின் ஆண்டு சராசரி காற்று வெப்பநிலை அதன் சுற்றியுள்ள பகுதிகளை விட 1 முதல் 3 ° C (1.8 முதல் 5.4 ° F) வரை வெப்பமாக இருக்கும். தெளிவான, அமைதியான இரவில், இந்த வெப்பநிலை வேறுபாடு கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது 12 ° C (22 ° F) வரை கூட அதிகரிக்கும். இது நகரவாசிகளின் உடல்நலத்தை மிக அதிகமாக பாதிக்கிறது.
நகரம் உற்பத்தி செய்வது இரண்டு தான். ஒன்று நகரங்களின் அதீத கழிவு மற்றும் பணம் எனும் மாயை.
அதிகரிக்கும் வெப்பத்தால் மற்ற இடங்களில் உள்ள நீர் அளவு குறைகிறது. உணவு உற்பத்தியும் பாதிப்படைகிறது. உடல்நலமும் கெடுகிறது. இதனால் நகரவாசி சம்பாதிக்கும் பணமும் விலையேற்றத்தினால் விரைவில் கரைகிறது.
எப்போதெல்லாம் பெரும் ஊழிகள் நடந்துள்ளனவோ அப்போதெல்லாம் முதலில் பாதிக்கப்பட்டு, மக்களால் கைவிடப்படுவது நகரங்களே. அடிப்படைத் தேவைகளை நிரப்ப முடியாத இடங்களில் வாழ முடியாது.
Leave a comment