ஐரோப்பாவின் ஆறுகள்

ஐரோப்பாவில் மத்தியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் நீர் ஆதாரங்களான பல ஆறுகளுக்கு தாயகமாக உள்ளது.

வேளாண்மை, வணிகம், சுற்றுலா, நீர் மின்நிலையங்கள், அணு மின்நிலையங்கள், கப்பல் போக்குவரத்து என ஐரோப்பாவின் உயிர் நாடியாக விளங்குவது இந்த பனிச்சிகரங்களில் உருவாகும் ஆறுகளே.

1. ரைன் ஆறு: ரைன் ஆறு சுவிஸ் ஆல்ப்ஸில் உருவாகி சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து வழியாக பாய்ந்து வட கடலை அடைகிறது (North Sea). இது ஐரோப்பாவின் மிக நீளமான மற்றும் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.

ஜெர்மன் தொழில்துறை மையப்பகுதிகள் மற்றம் பல பெரு நகரங்கள் வழியாக பாயும் ரைன் ஆறு தானியங்கள் முதல் இரசாயனங்கள் மற்றும் நிலக்கரி வரையிலான பொருட்களை கப்பல் போக்குவரத்து மூலம் ஐரோப்பாவின் மிகப் பெரிய துறைமுகமான Rotterdam, மற்றும் Amsterdam துறைமுகத்திற்கும் கொண்டு சேர்க்கிறது. பல கால்வாய்கள் மற்றும் ஆறுகள் ரைனை டானூபுடன் இணைக்கின்றன. ஐரோப்பாவின் வணிகம் கருங்கடலில் உள்ள துறைமுகங்களிலும் நடக்கிறது. இந்த போக்குவரத்து உலக பெரு வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது வெப்பம் அதிகரிப்பதால் ஆல்ப்ஸ் மலையின் பனிச் சிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன, குளிர் காலப் பனிப்பொழிவும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரைன் ஆற்றின் நீர்மட்டம் கோடை காலத்தில் வெகுவாகக் குறையும் போது, சரக்குக் கப்பல்கள் கரை தட்டுவதைத் தடுக்க குறைந்த சுமையுடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதனால் வழக்கமான சரக்குகளில் கால் பகுதியை மட்டுமே கப்பல்களில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டடு, சரக்குகளை நகர்த்துவதற்கு அதிக கப்பல்கள் தேவைப்படுகின்றன. இதனால் அதிகரிக்கும் செலவு விலையேற்றத்தை அதிகரிக்கிறது.

2. டான்யூப் நதி: டான்யூப் நதி ஆல்ப்ஸில் உருவாகவில்லை என்றாலும் ஆல்ப்ஸ் மலையில் உருவாகும் பல ஆறுகள் டான்யூப் ஆற்றுடன் கலக்கின்றன. ஜெர்மனியின் கருங்காட்டில் தொடங்கும் டான்யூப் ஆறு ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, ருமேனியா மற்றும் பல நாடுகளில் பாய்ந்து கருங்கடலை அடைகிறது. டான்யூப் ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதியாகும். வடகடலில் இருந்து கருங்கடல் வரை நடக்கும் கப்பல் போக்குவரத்து, வேளாண்மை மற்றும் சுற்றுலா, நீர் மின்நிலையங்களுக்கு ஆதாரமாக இருப்பது டான்யூப் ஆறாகும்.

குறைந்த மழைப்பொழிவால் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வணிகம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

3. ரோன் நதி: சுவிஸ் ஆல்ப்ஸில் உருவாகும், ரோன் ஆறு சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் வழியாக பாய்ந்து, இறுதியில் மத்தியதரைக் கடலில் கலக்கிறது. இது ரோன் பனிப்பாறை, ஜெனிவா ஏரி மற்றும் ரோன் பள்ளத்தாக்கு போன்ற பல அழகிய சுற்றுலா பகுதிகள், பல நகரங்களைக் கடந்து மத்தியத் தரைக்கடலில் கலக்கிறது.

பிரான்சின் மிக நீளமான Loire ஆறு பிரான்சின் தென் கிழக்குப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கப் பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

வேளாண்மை, சுற்றுலா, நீர் மின் உற்பத்தியை ஆதரிக்கும் இந்த ஆறுகள் பிரான்சின் அணுமின் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. பனிச் சிகரங்களில் உருவாகும் ரோன் ஆற்றின் குளிர்ந்த நீர் அணுமின் நிலைய reactor பாகங்களை குளிர்விக்கப் பயன்படுகிறது.

கோடைக் காலங்களில் கடும் வெப்பத்தால் குறையும் நீரின் அளவு மற்றும் அதிகரிக்கும் நீரின் வெப்பம் போன்றவற்றால் அணுமின் நிலையங்கள் இந்நீரை பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் அணுமின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மின்சார தட்டுப்பாடு உருவாகிறது.

4. போ நதி: போ ஆறு ஆல்ப்ஸில் உருவாகி வடக்கு இத்தாலி வழியாக அட்ரியாடிக் கடலை அடைகிறது. இது இத்தாலியின் மிக நீளமான ஆறாகும். போ பள்ளத்தாக்கில் நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் கப்பல் போக்கவரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த ஆறும் வறண்டு வருவதால் இத்தாலியின் தொழில்துறை மற்றும் வேளாண்மை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started