கரிம சேமிப்பு காற்றைத் தவிர மற்ற இடங்களில் சேமிக்கப்படும் கரிமத்தைக் குறிக்கிறது. கடல் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கரிமத்தை உயிர்கள் மூலமாகவும், நேரடியாகவும் மற்றும் சேமிக்கிறது. உயிர் கரிமப் பொருட்கள், நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயுக்கள், மீத்தேன் ஹைட்ரேட் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் அனைத்தும் கரிம சேமிப்புகளே.
கடலின் மேற்பரப்பில் இருக்கும் குளிர்ந்த நீர் நேரடியாக கரியமிலவாயுவை உறிஞ்சி மிக எளிதாக சேமிக்கிறது.
வளிமண்டலத்தை விட கடல் நீரில் 50 மடங்கு அதிக கரியமில வாயு கலந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர் கடல் நீரோட்டங்களால் ஆழ்கடலுக்குச் செலுத்தப்பட்டு பல வருடங்களுக்கு அங்கேயே இருக்கும்.
கடலின் உணவுச் சங்கிலியில் உள்ள பிளாங்க்டன் (நுண் மிதவைப் பாசி) முதல் நீலத் திமிங்கலம் வரை உள்ள உயிரினங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து உயிர் கரிமப் பொருட்களும் கடல் படுக்கையை அடைந்து அங்கேயே பல வருடங்களுக்கு இருக்கின்றன. பவளப்பாறைகள் மற்றும் ஓடுகளை உருவாக்கும் கடல் உயிரினங்கள் கடல் நீரிலிருந்து கரைந்த கரியமில வாயுவை எடுத்து கால்சியத்துடன் இணைத்து கால்சியம் கார்பனேட்டால் (சுண்ணாம்பு) ஆன இருப்பிடங்களை உருவாக்குகின்றன. இது இயற்கை சுழற்சியில் இருந்து கார்பனைக் குறைக்கிறது.
இது போன்ற வழிகளில் கரிமம் நீண்ட காலத்திற்கு ஆழமான கடலில் சேமிக்கப்படுகிறது.
கடலோரங்களில் உள்ள சதுப்புநிலங்கள், கடற்பாசி மற்றும் கடல் தாவரங்கள், பவளப் பாறைகள் போன்ற கடலோர சுற்றுச்சூழல்கள் காடுகளை விட பத்து மடங்கு அதிக கரிமத்தைச் சேமித்து வைக்கின்றன.
இந்த கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள் உலகளாவிய அளவில் சிறிய மேற்பரப்பை உள்ளடக்கியதாலும் மற்றும் கடலோர நகரமயமாக்கல் மற்றும் கடலோர பொருளாதார நடவடிக்கைகளால் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுவதாலும் இவற்றின் கரிம சேமிப்பு குறைகிறது.
காற்றில் அதிகரிக்கும் வெப்பத்தால் கடல் நீரின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மை மாறி கடலின் உயிர்ப்பன்மையத்தை எளிதில் பாதிக்கிறது. இதனால் கடலின் சேமிப்பு திறன் குறைக்கிறது.
ஆழ்கடலில் பல வகைகளில் சேமிக்கப்பட்டுள்ள கரிமம்எளிதில் வெளியேறாது ஆனால் ஒரு தடவை வெயேறத் தொடங்கினால் அது தொடர்ந்து கரிமத்தை வெளியிடும். துருவப் பகுதிகளில் ஆழ்கடல் வெப்பநிலை அதிகரிப்பது ஆழ்கடல்களில் இருந்து கரிமத்தை வெளியேற்றுகிறது.
இதனால் காற்றில் கரியமில வாயு அதிகரித்து வெப்பம் மீண்டும் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் வெப்பம் வானிலைகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் கடலில் உள்ள கரிமத்தை வெளியேற்றுகிறது. இந்த சுழற்சி காற்றில் உள்ள கரியமில வாயுவின் விகிதம் குறைந்தால் மட்டுமே நிற்கும்
Leave a comment