12. உறைபனி

“இன்று நாம் மிகவும் குளிரான இடத்திற்குச் செல்லப் போகிறோம். வானம் நன்றாகக் கறுத்து உள்ளது, விரைவில் மழை பெய்யலாம். நாம் நனையாமல் இருக்க தலைக்கு பனையோலை தொப்பியை அணிந்து செல்வோம்” என்றாள் வானதி

மிளகு, நெய் சேர்த்து சமைக்கப்பட்ட சூடான பருப்புச் சோறை நன்றாக உண்ட பின் இருவரும் மலையேறத் தொடங்கினர்.

ஓடைக்கரையைத் தாண்டி சோலைக்காடு வழியாக மலை உச்சியை அடைந்தனர். அங்கு மரங்களே இல்லை, எங்கும் பெரும் புல்வெளிகளே இருந்தன. மிகவும் குளிரான காற்று கிழக்கில் இருந்து அடிக்கத் தொடங்கியது. ஓரிடத்தில் மட்டும் ஊதா நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

தவ்வை அருகில் தான் இருக்க வேண்டும் என இருவரும் சுற்றுமுற்றும் பார்த்தனர். அங்கிருந்த பெரிய கடம்ப மரத்தின் அருகில் இருந்த குகை ஒன்றில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாட”.

சிறுவர்களைக் கண்ட தவ்வை “விரைவாக குகைகுள்ளே வாருங்கள், ஆலங்கட்டி மழை பெய்யப் போகிறது” என்றார்.

“இந்தப் பாடலுக்கான பொருள் என்ன?” எனக் கேட்டாள் வானதி

“மலைச்சாரலில் இருக்கும் குறிஞ்சிப் பூக்களில் இருந்து பெரிய தேன் உருவாகும் நாடு எனப் பொருள். நீங்கள் இப்போது வெளியே பார்த்ததும் குறிஞ்சிப் பூக்கள் தான்” என்றார் தவ்வை

“நேற்றைய கேள்விக்கான விடையை எளிதாகக் கண்டுபிடித்து விட்டோம். பனி தான் அது” என்றான் நந்தன்.

“ஆம் பனி தான். ஆனால் இன்று காணப் போவது உறை பனி” என்றார் தவ்வை

“வெப்பமான இடங்களில் எப்படி உறைபனி கிடைக்கும்?” என்றாள் வானதி

அப்போது மிகுந்த சத்தத்துடன் மழை கொட்டத் தொடங்கியது. குகையின் வாயிலுக்குச் சென்ற தவ்வை இரு கைக்களிலும் உறை பனிக்கட்டிகளுடன் திரும்பி வந்தார்.

“இவை என்ன, நாங்கள் இவற்றைக் கண்டதில்லையே” என்றான் நந்தன்

“இது தான் ஆலங்கட்டி அல்லது உறைபனி. எப்போதாவது மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் வெகுவேகமாக குளிர்வடையும் போது அவை திட நிலைக்கு சென்று விடுகின்றன. பின் எடை தாங்காமல் கீழே விழுகின்றன. இதை ஆலங்கட்டி மழை என அழைக்கின்றனர். எப்போதாவது நடக்கும் அரிய நிகழ்வு இது தற்போது எங்கும் அதிக அளவில் நடக்கத் தொடங்கி விட்டது” என்றார் தவ்வை

ஆலங்கட்டியை கைகளில் ஏந்திய நந்தனும், வானதியும் அவற்றின் அதீத குளிர்ச்சியால் கைகளை உதறினர்

“உங்கள் கைகள் எப்படி இருக்கின்றன?” என்றார் தவ்வை

“மிகவும் குளிர்ச்சியாக உள்ளன, ஆனால் ஆலங்கட்டி உருகி நீராகிவிட்டது” என்றான் நந்தன்

“உங்கள் கைகளில் இருந்த வெப்பத்தை உள்வாங்கிய ஆலங்கட்டி உருகி நீராக மாறிவிட்டது. வெப்பத்தை இழந்த கை குளிர்ந்து விட்டது. இழந்த வெப்பத்தை ஈடு செய்ய உடல் வெப்பத்தை ஆற்றல் கொண்டு உருவாக்கும். இது தான் ஆற்றல் பரிமாற்றம். இந்நிகழ்வே புவியின் துருவங்களில் நடக்கிறது. இது புவியின் காலநிலை பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது ” என்றார் தவ்வை

“எங்கோ இருக்கும் துருவங்களில் நடப்பது எப்படி புவியை பாதிக்கும்?” என்றாள் வானதி

“உலகில் உள்ள நன்னீரில் 2.1% உறைபனியாக துருவங்களிலும், பனிச்சிகரங்களிலும் உள்ளது. வெள்ளையாக இருக்கும் உறைபனி கோடைக்காலத்தில் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியையும் பிரதிபலிப்பதால் உருகுவதே இல்லை. இதனால் இங்குள்ள கடலும் பனிக்காலங்களில் உறைபனியாக உறைந்தும், கோடைக்காலத்தில் சிறிது உருகியும் காணப்படும்” என்றார் தவ்வை

“இது இயல்பாக நடப்பது தானே?” என்றான் நந்தன்

“புவியின் மத்திய ரேகைகளில் ஆண்டு முழுவதும் உள்வாங்கப்படும் வெப்பம் தொடர்ந்து கடல் நீரோட்டங்களால் குளிர்ந்த துருவங்களை நோக்கி கடத்தப்படுகிறது. இந்த வெப்பம் உறைந்திருக்கும் கடல் நீரைக் கோடையில் உருக்குகிறது. துருவக் கடல் நீர் கோடைக்கால முடிவில் மீண்டும் உறையத் தொடங்குகிறது”

“குளிர்காலத்தில் கடல் நீரால் கடத்தப்படும் வெப்பம் கடல்பனியை உருக்காதா?” என்றான் நந்தன்

“குளிர்காலத்தில் புவியின் வட அரைக்கோளத்தில் குறைவான சூரிய ஒளி விழுவதால் வட அரைக்கோளம் குளிர்ந்து காணப்படும். கடல் நீரோட்டங்கள் கொண்டு வரும் வெப்பத்தின் அளவு கடல் உறைபனியை உருக்கும் அளவிற்கு இல்லை. இதனால் வடதுருவ கடல் உறைபனி உருகாது.”

“அதே நேரத்தில் தென்துருவத்தில் கோடைக்காலம். இதனால் தென்துருவ கடல் உறைபனி உருகுமே?” என்றாள் வானதி

“ஆம், புவியின் மத்திய ரேகைப் பகுதிகளில் சேரும் வெப்பம் ஒரு துருவப் பனிக்கடலை மட்டுமே ஒரு கோடையில் உருக்கப் பயன்படுகிறது. இப்படித் துருவப்பனியாலும், கடல் நீரோட்டங்களாலும், காற்றோட்களாலும் புவியின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்கிறது. இதனால் காலநிலையும் சீராக உள்ளது” என்றார் தவ்வை.

“ஒரே இடத்தில் இருக்கும் கடல் நீர் எப்படி ஓடும்?” என்றான் நந்தன்

“உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” எனக் கேட்டார் தவ்வை

“நன்றாகவே நீந்துவோம்” என்றனர் இருவரும்.

“அப்படியானால் வயலில் உள்ள பெரிய கிணற்றுக்கு நாளை மதியம் வாருங்கள்” எனக் கூறி விடை பெற்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started