நந்தனும் வானதியும் அடுத்த நாள் காலையில் ஊரை விட்டு சிறிது தொலைவில் இருந்த ஏரிக்கு கிளம்பினர்.
அந்த ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, அதற்கு நீர் ஆற்றின் கிளை ஒன்றின் மூலம் வருகிறது, ஏரியின் பரப்பளவு மிகப் பெரியது, இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் செழிப்படைகிறது என்றும் அவர்களின் தாய் விளக்கியிருந்தார்
ஏரியை அடுத்த பெரிய மணல் திட்டை அடைந்த போது பொழுது வானில் ஏறிக் கொண்டிருந்தது. அங்கிருந்த புன்னை மரத்தடியில் தவ்வை அமர்ந்திருந்தார்.
“மழையில் மடியும் பூ உப்பு தானே?” என்றாள் வானதி
“ஆம், சரியான விடை. வாருங்கள் இன்று கடலைப் பற்றி சிறிது காண்போம்” என்றார் தவ்வை
“கடல் ஏன் உப்புக் கரிக்கிறது?” என்றான் நந்தன்
“கடல் நீரில் இருக்கும் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால் கடல் நீர் உப்புக் கரிக்கிறது” என்றார் தவ்வை
“கடலுக்கு உப்பு எங்கிருந்து வந்தது?”
“மேகத்தில் இருந்து உருவாகும் மழை நீர் மலைகளில், மண்ணில் பெரும் ஆற்றலுடன் விழும் போது அங்குள்ள கனிமங்களை அரிக்கிறது. இந்தக் கனிமங்கள் ஆறுகள் வழியாக கடலுக்கு வந்தடைகின்றன. இதனால் தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறது” என்றார் தவ்வை
“கடலில் ஏன் எப்போதும் அலையடிக்கிறது?” என்றான் நந்தன்
“கடலில் மட்டுமல்ல ஏரிகளிலும் அலையடிக்கும். இந்த ஏரியைப் பாருங்கள், இதன் கரையில் அலையடிக்கிறதா? ” என்றார் தவ்வை
“ஆம், ஆனால் நிலையாக ஓரிடத்தில் இருக்கும் நீரில் ஏன் அலை உருவாகிறது? “
“எப்போதும் நகர்ந்து கொண்டே காற்று கடல் மேற்பரப்பில் உள்ள நீரை நகர்த்துகிறது. இவ்வாறு நகரும் நீர் அலையாக உருவாகிறது. இப்படி காற்றில் உரசிக் கொண்டிருக்கும் சிறிதளவு கடல்நீர் நீராவியாகவும் மாறுகிறது.” என்றார் தவ்வை
“காற்றை எப்படிக் கடல் உருவாக்குகிறது?”
“பகலில் நிலம் வேகமாக வெப்பமடைவதால் நிலத்தில் மேற்பரப்பில் இருக்கும் காற்று வெப்பத்தால் மேல் எழும்புகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கடலின் மேற்பரப்பில் உள்ள குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசி வெப்பத்தைக் குறைக்கிறது. இதுவே இரவில் நேர்மாறாக மாறி, வேகமாக குளிர்ந்த நிலத்தில் இருந்து காற்று மிதவெப்பமான நீரை நோக்கி வீசுகிறது. இப்படிக் காற்றையும் கடல் கட்டுப்படுத்துகிறது” என்றார் தவ்வை
“அப்படியானால் கடல் மிகப் பெரியதாக இருக்க வேண்டுமே?” என்றான் நந்தன்
“புவியின் மேற்பரப்பில் 71% கடலால் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள நீரில் 97% நீர் கடலில் உள்ளது. உயிர்கள் சுவாசிக்க உயிர்வளி, உண்ண உணவு, நீடித்து வாழ ஏதுவான காலநிலை என அனைத்தையும் உருவாக்குவது கடல் தான்” என்றார் தவ்வை
“உயிர்வளி கடலில் எப்படி உருவாகும்?” என்றான் நந்தன்
“கடலின் மேற்பரப்பில் எண்ணிலடங்காத நுண்மிதவைப் பாசிகள் உள்ளன. இவை முதன்முதலாக புவியில் உருவான முதல் உயிரினங்களில் ஒன்றாகும். இந்த உயிரினங்கள் தாவரங்கள் போலவே ஒளிச்சேர்க்கை காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கி உயிர்வளியை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் உள்ள கரிமம் கடலில் சேர்கிறது”
“இவை தான் கடலின் உணவுச் சங்கிலிக்கு ஆதாரம் என நினைக்கிறேன்” என்றாள் வானதி
“ஆம், நுண்ணுயிர் பாசியின் உயிர்வளி வெளியீடு, உணவுத் தயாரிப்பு போன்றவை கடலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.” என்றார் தவ்வை
“காலநிலைக்கு கடல் எப்படி காரணமாகிறது?” என்றான் நந்தன்
“சூரிய வெப்பத்ரால் கடலின் மேற்பரப்பில் இருந்து உருவாகும் நீராவி வளிமண்டலத்தில் மேகமாக மாறி கடைசியில் மழையாகப் பொழிகிறது. நீராவிப் போக்கினால் கடலின் மேற்பரப்பு வெப்பம் குறைகிறது. நிலத்தில் பெய்யும் மழையால் நில மேற்பரப்பு வெப்பம் குறைகிறது. ஆறுகளில் சேரும் மழை நீர் மண்ணைச் செழிக்க வைத்து பின் கடலுக்கே திரும்பச் சேர்கிறது” என்றார் தவ்வை
“இந்த நீர்சுழற்சி தினசரி வானிலையைப் பாதிக்கிறது. நீண்ட காலமாக தொடர்ந்து நீடிக்கும் பருவங்கள், காலநிலையை எப்படிக் கடல் கட்டுப்படுத்துகிறது?” என்றாள் வானதி
“கடல் உள்வாங்கும் வெப்பம், துருவங்களில் உள்ள உறைபனி, கடல் நீரோட்டங்களில் இதற்கான விடை உள்ளது. நாளை மலையுச்சியில் உள்ள பெரும் குகைக்கு வாருங்கள், அங்கு உறைபனியைப் பற்றி உரையாடுவோம். அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனைக் கண்டால் ஓடி விடுவான். அவன் யார் என நாளை கூறுங்கள்” எனக் கூறி விடைபெற்றார் தவ்வை
Leave a comment