முந்தைய நாள் ஆற்றில் வெகுநேரம் நீந்தி விளையாடிய களைப்பால் வானதியும் நந்தனும் காலை பொழுது விடியும் வரை அசந்து தூங்கிவிட்டனர். பறவைகளின் ஒலியும், சேவல் கூவுவதையும் கேட்டு விழித்தவர்கள் நேரமாகிவிட்டது என விரைவாகக் குளிக்கக் கிளம்பினர்.
அவர்களின் தாய் கேழ்வரகில் செய்திருந்த கார ரொட்டியையும், இனிப்பு புட்டையும் உண்ட பின் பானையில் இருந்த நீரை குடிக்கச் சென்ற நந்தனுக்கு நேற்றைய விடுகதைக்கு பதில் புலப்பட்டுவிட்டது.
வானதியிடம் விடையைப் பகர்ந்து கொண்ட பின் இருவரும் ஓட்டமும் நடையுமாக ஆற்றை நோக்கி குறுக்கு வழியாக வாய்க்கால் மேட்டில் ஓடினர்.
ஆற்றில் இருந்து பிரிந்து வந்த வாய்க்கால் நீரின் மூலம் உருவான நெல் வயல்களில் கொக்குகள் உணவைத் தேடி நடந்து கொண்டிருந்தன. மலையடிவாரத்தில் ஆற்றின் ஒரு கிளை ஒரு ஏரியை நிரப்பிக் கொண்டிருந்தது. ஏரி முழுக்க பல்வேறு பறவைகள் அங்குமிங்கும் இரை தேடிப் பறந்து கொண்டிருந்தன.
“வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்” என்ற பாடல் தொலைவில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆற்றங்கரையின் அருகே இருந்த மிகப் பெரிய இலுப்பை மரத்தினடியில் தவ்வை பாடிக் கொண்டிருந்தைக் கண்ட நந்தன் “பானை தான் விடை” எனக் கூவினான்.
“ஆம், பானை தான் விடை. ஆனால் உருத்திரங்கண்ணனார் என்பவரால் பட்டினப்பாலையில் இயற்றப்பட்ட இந்தப் பாடலுக்கும், பானைக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?” எனக் கேட்டார் தவ்வை.
“இந்தப் பாடலின் பொருள் என்னவென்று கூறுங்கள்” என்றாள் வானதி
“ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது என்பதே இதன் பொருள்” என்றார் தவ்வை
“பாடல் நீர்சுழற்சியை விளக்குகிறது ஆனால் பானைக்கும் பாடலுக்கும் என்ன தொடர்பு?” என்றான் நந்தன்
“கடல் நீர் ஆவியாவது போலவே பானை நீரும் ஆவியாகிறது. நீராவி புவியின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது” என்றார் தவ்வை
“கடல் நீர் சூரிய ஒளியில் வெப்பமடைந்து ஆவியாகிறது. குளிர்ந்த பானை நீர் ஏன் ஆவியாகிறது?” என்றாள் வானதி
“திரவ நீரில் உள்ள நீர் மூலக்கூறுகள் ஒரே இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன, ஒன்றின் மேல் ஒன்று மோதுகின்றன. அப்போது மேற்பரப்பில் உள்ள சில நீர்மூலக்கூறுகளுக்கு அதிக ஆற்றல் கிடைத்து நீரை விட்டு காற்றில் கலக்கின்றன. இதுவே நீராவிப் போக்கு. இது நீரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்” என்றார் தவ்வை
“பானை நீர் ஏன் விரைவாகக் குறைகிறது, மற்ற பண்டங்களில் அப்படி நடப்பதில்லையே?” என்றான் நந்தன்
“மண்ணால் ஆன பானைகளில் நுண்ணிய ஓட்டைகள் உள்ளன. இதனால் நீர் காற்றுடன் சேர மிகப்பெரிய பரப்பளவு கிடைக்கிறது. இதனால் தான் பானை நீர் வேகமாக ஆவியாகி, நீரின் அளவு குறைகிறது” என்றார் தவ்வை
“பானை நீர் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது?” என்றாள் வானதி
“நீராவி ஒரு வெப்பத்தேக்க வாயு. அது நீரில் இருந்து காற்றில் கலக்கும் போது நீரின் வெப்பத்தையும் எடுத்துச் செல்கிறது. இதனால் நீரின் வெப்ப அளவும் குறைகிறது. எடை குறைந்த வெப்பமான நீராவி மேலே எழுவதாலும், சுற்றுப்புறம் பிரதிபலிக்கும் வெப்பத்தை நீராவி உள்வாங்குவதாலும் சுற்றுப்புறத்தின் வெப்பம் குறைகிறது.” என்றார் தவ்வை
“புவியின் இயக்கத்தில் நீராவியின் பங்கு என்ன?” என்றான் நந்தன்
“புவியின் மேற்பரப்பில் 70% உள்ள கடல் நீர் ஆவியாவதால் தான் புவியின் மேற்பரப்பு குளிர்ச்சியாக உள்ளது. குளிர் குறைந்த வளிமண்டலத்தின் மேற்பகுதிக்கு நீராவி மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது” என்றார் தவ்வை
“மேலே சென்ற நீராவி என்னாகும்?” எனக் கேட்டான் நந்தன்
“நீராவி குளிர்ந்து மேகமாகி மழையாகப் பொழியும். அப்போது நீரில் உள்ள வெப்பம் வளிமண்டலத்தின் மேற்பகுதிக்குக் கடத்தப்படுகிறது.” என்றார் தவ்வை
“ஆனால் கோடைக் காலத்தில் வெப்பம் புவியின் மேற்பரப்பில் அதிகமாக உள்ளதே?” என்றான் நந்தன்
“நாளை இதை விளக்குகிறேன். ஊரெல்லாம் சுற்றி வருவான். வெளுத்தும் இருப்பான், கருத்தும் இருப்பான். கேட்டால் கொடுக்க மாட்டான். கேட்காமலே கொடுப்பான் இவன் யாரென்று நாளை சொல்லுங்கள். மலையின் மறுபக்கம் உள்ள புதர்க்காட்டில் நாளை அதிகாலையில் சந்திப்போம்” என்றார் தவ்வை.
Leave a comment