8. நீர்

அதிகாலையில் இருவரும் குளிர்ந்த நீரில் குளித்த பின் சிகப்பரிசி கஞ்சியையும், கருப்பட்டி சேர்த்த தேங்காய்த் துருவலையும் உண்டுவிட்டு கிளம்பினர். இருண்ட வானத்தை நோக்கிய போது நேற்றைய கேள்விக்கான விடை அங்கு இருந்ததைக் கண்டனர்.

சிறிது நாள் முன்பு சென்ற ஓடையை பின்தொடர்ந்து சென்றால் ஓடைகளின் கூடலை அடையலாம் என ஓடை வழியில் சென்றனர்.

போகும் வழியெல்லாம் சிறு ஓடைகள், வாணிகள் என அவர்கள் தொடர்ந்த ஓடையில் கலந்து கொண்டே இருந்தன, ஓடையின் நீர்வரத்தும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஓடைக் கரை எங்கும் பெரு மரங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றின் மேல் பல்வேறு பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. நீர் தேங்கிய இடங்களில் பெரு மீன்கள் துள்ளி நீந்திக் கொண்டிருந்தன. மணலில் படுத்திருந்த நீர்நாய்கள் மீன்களை வேட்டையாட நீரில் மூழ்குவதும், வேகமாக நீந்துவதுமாக இருந்தன.

ஓடையின் மறுகரையில் பெரும் மணல் திட்டில் இருந்த மருத மரத்தடியில் தவ்வை ஒரு பாடலை உரக்கப் பாடிக் கொண்டிருந்தார்

“வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்”

தவ்வை காவிரி ஆற்றைப் பற்றி பாடுகிறார் எனத் தெரிந்தது ஆனால் ஓடையை எப்படிக் கடப்பது எனத் தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தனர்.

அங்கு ஒரு பெருமரம் ஓடையின் குறுக்காக, மணல் மேட்டில் மேல் விழுந்து கிடந்தது. அந்த மரத்தின் மேல் ஏறி ஓடையின் மறுகரையை அடைந்து தவ்வையை நோக்கி ஓடினர்.

“விண்மீன், விண்மீன்” எனக் கூவிக் கொண்டே ஓடினான் நந்தன்.

“ஆம், இரவில் கருவானத்தில் இருக்கும் விண்மீன் கூட்டங்களே விடை” என்றார் தவ்வை. மணல் திட்டின் மறுபுறத்தில் ஒரு பெரிய ஓடை ஓடிக் கொண்டிருந்தது.

மணலில் ஓடியதால் சூடான கால்களை குளிர்விக்க ஓடைகள் கூடி, ஆறாக மாறி இருந்த இடத்தில் கால்களை நனைத்தனர். மிகவும் குளிர்ச்சியான ஆற்று நீர் அவர்கள் கால்களுக்கு இதமாக இருந்தது.

“எங்கு பார்த்தாலும் வெயில், மணல் சூடாக இருக்கிறது, ஆனால் நீர் மட்டும் ஏன் குளிர்ச்சியாக இருக்கிறது?” என்றாள் வானதி

“குளிர்ந்த மலைகளில் உருவாகும் ஆறுகள் சூடாக அதிக நேரம் தேவைப்படுகிறது. அதனால் ஆற்று நீர் நிலத்தை விட குளிர்ச்சியாக உள்ளது.” என்றார் தவ்வை

“இரவில் நிலத்தை விட வீட்டில் இருக்கும் நீர் சிறிது வெப்பமாக இருக்கிறதே?”என்றாள் வானதி

“நீர் வெப்பமடைய நீண்ட நேரம் எடுக்கும். அது குளிர்ந்த நிலைக்கு மாறவும் நீண்ட நேரம் எடுக்கும். அதனால் தான் பகலில் நீர் நிலத்தை விட மெதுவாக வெப்பமடைகிறது, இரவில் நிலத்தை விட மெதுவாக குளிர்வடைகிறது.”

“இந்த பண்பே புவியின் பெரும்பாலான இயக்கங்களுக்குக் காரணம்.” என்றார் தவ்வை.

“நீர் எப்படி புவியின் இயக்கத்துக்குக் காரணமாக இருக்கிறது?” என்றாள் வானதி

“பகலில் புவியின் மேற்பரப்பின் மேல் விழும் சூரிய ஒளியில் பெரும் பகுதியை கடல்நீர் உள்வாங்கிக் கொண்டு மெதுவாக வெப்பமடைகிறது, இதனால் புவியின் மேற்பரப்பு வெப்பநிலையும் பகலில் மெதுவாக உயர்கிறது.”

“அப்போது இரவு ஏன் அதிகமாக குளிர்வதில்லை?”

“பகலில் வெப்பத்தை உள்வாங்கிய நீர் மெதுவாக குளிரும் போது உள்வாங்கிய ஆற்றலை வெளியிடுகிறது. இதனால் நீரின் சுற்றுப்புறம் இரவில் மிதவெப்பமாக உள்ளது. இந்நிகழ்வு புவியின் வெப்பநிலையக் கட்டுப்படுத்துகிறது, பல இடங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது” என்றார் தவ்வை.

“காற்றைப் போலவே நீரும் புவியின் வெப்பத்தை விநியோகிக்கிறதா?” என்றான் நந்தன்

“ஆம், நீரின் அதிக வெப்பப் பயன்பாடு திறன் காரணமாக, புவியும் நீரைப் பயன்படுத்தி வெப்பத்தை கடல் நீரோட்டங்கள் மூலம் குளிர் நிரம்பிய துருவங்களுக்கும், நீராவி நிரம்பிய காற்றின் மூலம் அதிக உயரத்துக்கும் வெப்பத்தைப் விநியோகிக்கிறது.”

“இதன் மூலம் புவியில் உயிர் வாழ்வதற்கு உகந்த வெப்பநிலையை புவி பராமரிக்கிறது.” என்றார் தவ்வை.

“சூடான நீராவி எப்படி வெப்பத்தை விநியோகிக்கும்?” என்றாள் வானதி

“நாம் சிறிது நேரம் நீரில் விளையாடிய பிறகு வீட்டிற்கு கிளம்பலாம். பார்த்தால் வேர்த்திருக்கும், தொட்டால் குளிர்ந்திருக்கும் இதற்கான விடையை நாளை ஆற்றங்கரைக்கு வரும்போது கூறினால் நீராவியைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார் தவ்வை.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started