17. அதிகரிக்கும் வெப்பம்

அடுத்த நாள் நண்பகலில் நந்தனும் வானதியும் தங்கள் தாய் கோதை மற்றும் தங்கைகள் யாழினி, எழிலியுடன் தவ்வையைக் காண ஆற்றங்கரைக்குச் சென்றனர்.

தவ்வை அங்கிருந்த பெரிய இச்சி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். தவ்வைக்கு தங்களின் தாய் மற்றும் தங்கைகளை அறிமுகப்படுத்தினான் நந்தன்.

“வணக்கம் தவ்வை. புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் பல இன்னல்களை நாம் சந்திக்கிறோம் எனச் செய்திகள் வருகின்றனவே. இதைப் பற்றி உங்களிடம் உரையாடலாம் என இங்கு வந்தேன்” என்றார் கோதை

“உங்களுக்கு தெரிந்ததைக் கூறுங்கள்” என்றார் தவ்வை

“சில நேரம் சூரியக் கதிர்வீச்சின் தீவிரம் அதிகரிப்பதால் காற்றில் வெப்பம் அதிகரிக்கலாம்” என்றார் கோதை

“சூரிய கதிர்வீச்சின் தீவிரம் சில ஆண்டுகளில் அதிகரித்தும், சில ஆண்டுகளில் குறைந்தும் உள்ளது. ஆனால் புவியின் சராசரி வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் காடழிப்பும், காற்றில் அதிக அளவில் கலக்கும் வெப்பத்தேக்க வாயுக்களுமே” என்றார் தவ்வை

“அதிகரிக்கும் வெப்பத்தேக்க வாயுக்களின் விகிதம் எப்படி புவி முழுவதும் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது?” என்றார் கோதை

“வெப்பத்தேக்க வாயுக்களின் அளவு காற்றில் அதிகரிக்கும் போது காற்றின் வெப்பத்தைத் தேக்கி வைக்கும் திறனும் அதிகரிக்கிறது. இதனால் அண்டவெளிக்குச் செல்லவேண்டிய வெப்பம் புவியில் தங்கி விடுகிறது. இந்த வெப்பம் பல இடங்களுக்கு விநியோகிக்கப்படுவதால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது” என்றார் தவ்வை

“காடழிப்பு எவ்வாறு வெப்பத்தை அதிகரிக்கிறது?” என்றாள் வானதி

“இயற்கையாகவே காற்றில் கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வெப்பத்தேக்க வாயுக்கள் உண்டு. காடுகள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உணவு உற்பத்திக்காக மண்ணில் சேர்க்கின்றன. காடுகள் அழியும் போது அதிக அளவு கரியமில வாயு காற்றில் தங்கி, காற்றின் வெப்பத் தேக்கத் திறன் அதிகரிக்கிறது. இதனால் வெப்பமும் அதிகரிக்கிறது” என்றார் தவ்வை

“இவ்வாயுக்களின் விகிதம் ஏன் அதிகரிக்கிறது?” என்றான் நந்தன்.

“கடந்த 300 ஆண்டுகளாக நடந்த படிம எரிபொருட்களின் எரிப்பு தொடர்ந்து கரியமில வாயு, மீதேன் வாயுவையும், வேதி உப்பு அடிப்படையிலான வேளாண்மை நைட்ரஸ் ஆக்சைடையும் அதிக அளவில் வெளியிட்டதே இந்த வாயுக்களின் விகிதம் அதிகரிப்பதற்கு காரணம். இயற்கைக்கு புறம்பான பல செயற்கை வெப்பத்தேக்க வாயுக்களும் காற்றில் கலக்கின்றன” என்றார் தவ்வை

“செயற்கையான வாயுக்கள் எதற்காக உற்பத்தியாகின்றன?” என்றாள் வானதி

“மக்களின் வசதிகளான ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை குளோரோஃபுளோரோ கார்பன் ( CFC, HFC) போன்ற வாயுக்களை வெளியிடுகின்றன. பெரிய மின்சாதனங்கள் SF6 எனும் வாயுவை வெளியிடுகின்றன” என்றார் தவ்வை

“இவற்றின் விகிதம் காற்றில் மிகச் சிறிய அளவில் தானே உள்ளது?” என்றார் கோதை

“இந்தச் செயற்கை வாயுக்கள் அனைத்தும் கரியமில வாயுவை விட பல ஆயிரம் மடங்கு வெப்பத்தை தேக்கும் திறன் பெற்றவை. இவை செயற்கையாக உருவாவதால் இயற்கையாக அழியாமல் வளிமண்டலத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் நீடித்து இருக்கும்” என்றார் தவ்வை

“சராசரி வெப்பம் என்றால் என்ன?” என்றார் கோதை

“உலகில் பல இடங்களிலும், பல நேரங்களிலும் வெப்பம் மாறிக் கொண்டே இருக்கும். இவை அனைத்தின் சராசரிக் கணக்கே சராசரி வெப்பநிலை. 1850 வாக்கில் தொழிற்புரட்சியால் படிம எரிபொருள் எரிப்பு தொடங்கியது. அப்போது உலகின் சராசரி வெப்பநிலை 13°C. தற்போதைய வெப்பநிலை இதை விட 1.25°C கூடுதலாகும்” என்றார் தவ்வை

“இந்த வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் என்ன நடக்கும்?” என்றான் நந்தன்

“புவியின் அங்கங்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவை. இவற்றை இயக்குவது வெப்பம். அதிகரிக்கும் வெப்பம் இந்த பிணைப்பின் இயல்பை மாற்றும். இது பல்வேறு வகைகளில் புவியின் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக மனித நாகரீகம் சரிவடையும்” என்றார் தவ்வை

“இதைத் தான் காலநிலை மாற்றம் என அழைக்கிறார்களா?” என்றார் கோதை

“காலநிலைப் பிறழ்வு எனக் கூறுவதே சரியாக இருக்கும். நாளை புதர்க்காட்டில் இருக்கும் காட்டாற்றங்கரைக்கு வாருங்கள், காலநிலைப் பிறழ்வு குறித்து விரிவாக உரையாடுவோம்” எனக் கூறினார் தவ்வை

“பல நாட்களாக இக்குழந்தைகளுடன் உரையாடுகிறீர்கள் ஆனால் நீங்கள் யார் எனச் சொல்லவில்லையே?” என்றார் கோதை

“விரைவில் உங்களுக்கு விடை தெரியும். நாளை மதிய உணவையும் கொண்டு வாருங்கள்” எனக் கூறி கிளம்பினார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started