7. வெப்பத் தேக்க விளைவு

மறுநாள் காலை உணவு உண்ட பின் நந்தனும் வானதியும் மலையின் மறுபுறம் இருக்கும் சோலைக்காட்டிற்கு கிளம்பினர்.

வெப்பம் அதிகமாக இருந்ததால் மலையடிவாரத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மலையறேத் தொடங்கினர். மலையில் ஏறும் போது காற்றின் வெப்பம் தொடர்ந்து குறைந்து வருவதை உணர்ந்தனர், காற்றின் வேகமும் அதிகரித்து இருந்தது. இதனால் குளிர் அதிகமாக இருந்தது.

மலையின் இடையே இருந்த பள்ளத்தாக்கில் நீண்டு உயர்ந்த பெரும் மரங்கள் நிரம்பி இருந்தன. அங்கு ஒரு பெரிய ஓடை ஒன்று சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. இது தான் சோலைக் காடாக இருக்க வேண்டும் என எண்ணி இருவரும் காட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கு ஒரு பெரிய குறுநாவல் மரத்தடியில் தவ்வை அமர்ந்திருந்தார். சோலைக்காட்டிற்குள் குளிரும் இல்லை, வேகமான காற்றும் இல்லை. இதமான வெப்பமும், அமைதியும் மிகுந்திருந்தது. சூரிய ஒளியும் அதிக அளவில் தரையை அடையவில்லை. பறவைகளின் இனிமையான ஒலியும், எப்போதாவது கேட்கும. விலங்குகளின் ஒலியும் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

இருவரும் தவ்வையை நோக்கி “எங்கள் விடுகதைக்கு பதில் எங்கே?” எனக் கூவினர்.

“வீட்டில் இருக்கும் பல்லி, ஆற்றில் இருக்கும் முதலை, காட்டில் இருக்கும் உடும்பு தானே அவை?” என்றார் தவ்வை.

“ஆம், சரியான விடையைக் கூறிவிட்டீர்கள். எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. இந்தச் சோலைக்காட்டில் ஏன் குளிர் இல்லை ஆனால் இதைத் தாண்டி இருக்கும் புல்வெளியில் குளிர் அதிகமாக இருக்கிறதே?” என்றான் நந்தன்.

“அதற்கு காரணம் சோலைக்காட்டின் மரங்களும், காற்றும்தான். அதிக அளவில் சூரிய ஒளி காட்டின் தரையில் விழுவதை மரங்கள் தடுக்கின்றன. இதனால் காட்டின் பகலில் வெப்பம் அதிகரிப்பதில்லை”

“அதே வேளையில் மரங்களில் இருந்து வெளியேறும் நீராவி காற்றில் கலந்து பகல் நேர வெப்பத்தை உள்வாங்கி சிறிது நேரம் கழித்து வெளியிடுகிறது. இதனால் இரவுகளும் மிதமான குளிருடன் உள்ளன. புறச்சூழல் எவ்வளவு மாறினாலும் காட்டின் தட்பவெப்பம் சீராகப் பராமரிக்கப்படுகிறது. இது தான் காற்றின் வெப்பத்தேக்க விளைவு” என்றார் தவ்வை.

“காற்று எப்படி வெப்பத்தை தேக்கும்?” என்றான் நந்தன்

“காற்று பல வாயுக்களின் கலவை ஆகும். வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், நீராவி போன்ற வாயுக்கள் சூரிய ஒளியை ஊ கண்ணாடி போல் உள்ளே அனுமதிக்கின்றன.  ஆனால் புவியின் மேற்பரப்பு பிரதிபலிக்கும்  வெப்ப ஆற்றலை ( infra red rays) உள்வாங்கி, சிறிது நேரம் கழித்து அனைத்து திசைகளிலும் வெப்பத்தை வெளியிடுகின்றன. இதனால் காற்றின் வெப்பம் சீராகப் பராமரிக்கப்படுகிறது. இது தான் காற்றின் வெப்பத்தேக்க விளைவு” என்றார் தவ்வை.

“ஓசோன் மண்டலம் இதைத் தான் செய்கிறதா?” என்றாள் வானதி

“வளிமண்டலத்தின் மேற்பகுதியில் ஓசோன் மண்டலம் உள்ளது. ஓசோன் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்களை (ultra violet rays) உள்வாங்கி வெப்பமாக அண்டவெளிக்கே வெளியிடுகிறது. இதனால் அதிக ஆற்றல் கொண்ட புற ஊதாக் கதிர் புவியைத் தாக்குவதில்லை.”

“வெப்பத்தேக்க விளைவால் என்ன பயன்?” எனக் கேட்டான் நந்தன்

“புவியின் மேற்பரப்பு வெப்பத்தைத் தொடர்ந்து பிரதிபலிப்பதால் இரவில் வேகமாக குளிர்ந்து விடுகிறது. காற்று வெப்பத்தை தேக்கி வைப்பதால் புவியின் மேற்பரப்பு அதீத குளிர் அடையாமல் தடுக்கிறது. இதனால் புவியின் மேற்பரப்பு  இரவிலும் மித வெப்பமாகவே உள்ளது. இது உயிர் வாழ உகந்த வெப்பநிலை ஆகும்.” என்றார் தவ்வை

“வெப்பம் குறைந்தால் நல்லது தானே?” என்றாள் வானதி

“வெப்பம் இல்லையென்றால் புவியின் மேற்பரப்பு கடும் குளிரால் உறைந்து விடும். வெப்பம் இல்லாத இடத்தில் எந்த உயிரும் வாழ முடியாது. இதைத் தடுக்க வெப்பத்தேக்க வாயுக்கள் காற்றில் உயிர் வாழத் தேவையான அளவு வெப்பத்தை தேக்கி வைத்து மெதுவாக வெளியிடுகிறது” என்றார் தவ்வை

“பகலில் வெப்பம் ஏன் தொடர்ந்து அதிகரிப்பதில்லை?” என்றான் நந்தன்

“அதற்கு காரணம் நீர். இன்று பொழுதாகிவிட்டது. நாளை மீண்டும் சந்திப்பதற்குள் என் விடுகதைக்கு பதில் கூறுங்கள். கருப்பு திரையில் பூக்கும் முல்லைகளை எடுப்பாரும் இல்லை, தொடுப்பாரும் இல்லை. இதற்கான பதிலுடன் நாளை இரு ஓடைகள் இணைந்து சிற்றாறு உருவாகும் கூடலில் உள்ள தீவுக்கு அருகே வாருங்கள்” என்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started