6. காற்று

நேற்றைய கேள்விக்கு தாயிடம் பதில் இருந்தது, இன்றைய கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லையே என்ற கவலையுடன் நந்தனும், வானதியும் உறங்கச் சென்றனர். மெலிதாக அடித்த தென்றல் காற்றால் புழுக்கம் இல்லாமல் நன்றாக உறங்கினர் இருவரும்.

அதிகாலையில் அவர்கள் எழும் போது நல்ல குளிர்ந்த காற்று அவர்களை வருடிச் சென்றது. விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது என வானதி நந்தனின் காதில் கிசுகிசுத்தாள்.

பிறகு இருவரும் இன்றைக்கு தவ்வைக்கு நம் வீட்டு உணவை கொடுப்போம் என கம்மங்கூழையும், மோரையும் உரிச்சட்டிகளில் ஊற்றி எடுத்துக் கொண்டனர்

அவர்கள் வழக்கமான ஓடை, காட்டைத் தாண்டி புல்மேட்டை அடையும் போது பொழுது நன்றாக ஏறிவிட்டு இருந்தது ஆனால் வெப்பம் குறைவாக இருந்தது. புல்மேட்டில் எங்கும் புல் மட்டுமே இருந்தது, ஒரு மரத்தைக் கூட காணவில்லை.

புற்களுக்கிடையே இருந்த ஒரு பாறை மேல் அமர்ந்திருந்த தவ்வையிடம் சென்று கம்மங்கூழையும் மோரையும் உண்பதற்குக் கொடுத்தனர். “அனைவரும் பகிர்ந்து உண்போம் வாருங்கள்” என்றார் தவ்வை.

உணவு உண்ட பின் “நேற்றய விடுகதைக்கு காற்று தானே விடை” என்றான் நந்தன். “ஆம், காற்றே தான். அதைப் பற்றி தான் இன்று நாம் பேசப் போகிறோம். புவி உருவாகும் போதே காற்றும் உருவாகி விட்டது, ஆனால் இன்றைய வளிமண்டலம் போல் இல்லாமல் மிகுந்த நச்சுக் காற்றாக இருந்தது” என்றார் தவ்வை.

“ஏன் காற்று அவ்வாறு இருந்தது?” என்றான் நந்தன்

“புவி உருவாகிய போது எரிமலைகள் தொடர்ந்து வெடித்து பல நச்சு வாயுக்களை வெளியேற்றிக் கொண்டே இருந்தன. தொடர் எரிமலை வெடிப்பு நின்று பல கோடி ஆண்டுகள் கழித்த பின்னரே காற்று உயிர் வாழத் தகுதியானதாக மாறியது” என்றார் தவ்வை

“காற்று எப்படி உயிர்களை வாழ வைக்கிறது?” என்று கேட்டாள் வானதி

“வளிமண்டலத்தின் மேற்பகுதி ஆற்றல் மிகுதியான சூரிய ஒளியைப் பெருமளவில் அண்டவெளிக்குப் பிரதிபலிக்கிறது.”

“புவியின் வளிமண்டலத்தில் இருக்கும் காற்று புவியின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை ஓரிடத்தில் தங்கவிடாமல் பல இடங்களுக்கு விநியோகிக்கிறது. ”

“காற்று எப்படி வெப்பத்தை விநியோகிக்கிறது?”

“வெப்பமான புவியின் மேற்பரப்பு காற்றை சூடாக்குகிறது. காற்று சூடாகும் போது விரிவடைகிறது. இதனால் எடை குறைந்த வெப்பமான காற்று மேலே எழும்புகிறது. அப்போது அங்கு ஒரு வெற்றிடம் உருவாகி காற்றின் அழுத்தம் குறைகிறது. அதை ஈடு செய்ய அழுத்தம் அதிகமான பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று வருகிறது.”

“மேல் எழும்பிய காற்று என்னாயிற்று?”

“வளிமண்டலத்தின் மேற்பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால் மேலே எழுந்த சூடான காற்றின் வெப்பம் குறைந்து, காற்றின் அடர்த்தி அதிகரிக்கும். இதனால் எடை கூடிய குளிர்ந்த காற்று மீண்டும் கீழே வரும். இது ஒரு தொடர் நிகழ்வு. காற்று நகர்வதற்கு இதுவே அடிப்படை. இப்படி நகரும் காற்று தான் பல இடங்களுக்கு மழையை கொடுக்கிறது. இவற்றை காற்றோட்டம் என அழைக்கிறோம். இதனால் புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிக்காமல் சீரான அளவில் பராமரிக்கப்படுகிறது.”

“உயரமான இடங்களில் காற்றின் அடர்த்தி குறைவாக இருப்பதால், காற்றழுத்தம் குறைவாக இருக்கும். அதனால் தான் உயரமான மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கிறது” என்றாள் வானதி

“காற்றைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டாய் வானதி. இதில் காற்றின் வெப்பத்தேக்க விளைவும் பங்கு வகிக்கிறது” என்றார் தவ்வை.

“வெப்பத்தேக்க விளைவு என்றால் என்ன?” என்றான் நந்தன்

“காற்றில் உள்ள சில வாயுக்களுக் வெப்பத்தை உள்வாங்கி, சிறிது நேரம் கழித்து வெளியடும் பண்பு உள்ளது. இதுவே காற்றின் வெப்பத்தேக்க விளைவு. இதுவும் புவியின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது”

“இப்படிப் பல்வேறு வகைகளில் காற்று புவியின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கிறது. இவற்றை விரிவாக நாளை சோலைக் காட்டில் காண்போம்” என்றார் தவ்வை.

“இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு விடுகதை வைத்திருக்கிறோம். மூவருக்கும் ஒரே முகம். ஒருவர் ஆற்றில், ஒருவர் காட்டில், ஒருவர் வீட்டில். யார் இவர்கள் என நாளை பதில் கூறுங்கள்” எனக் கூறி நந்தனும், வானதியும் தவ்வையிடம் விடை பெற்றனர்.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started