5. வெப்பம்

அதிகாலையில் நந்தனும், வானதியும் மலையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். நேற்றுச் சென்ற ஓடை வழியாகவே காட்டுக்குள் சென்றனர். அதிகாலை நேரத்தில் வழிதோறும் பல்வேறு பறவைகள் எழுப்பிய இனிமையான சத்தங்களை கேட்டுக் கொண்டே நடந்தனர்.

மெதுவாக பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் மலை உச்சியில் இருக்கும் மொட்டைப் பாறையை அடைந்து விட்டனர். காட்டின் உள்பகுதியில் இருந்த குளிர்ச்சி மறைந்து வெப்பம் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தது.கிழக்கில் எழும் பொழுதை பார்த்தவாறு மொட்டைப் பாறையில் அமர்ந்திருந்தார் தவ்வை.

“நேற்றைய கேள்விக்குப் பதில் முருங்கை தானே?” எனக் கேட்டாள் வானதி.

“ஆம், முருங்கைப் பூ,காய் மற்றும், முருங்கை காயுமே விடை. களைப்புத் தீரப் பாறையில் இருக்கும் சுனை நீரைப் பருகி விட்டுப் இந்த பழங்களை உண்ணுங்கள்.” என்றார் தவ்வை.

அருகில் ஒரு கூடை நிறைய பலாச் சுளைகளும், மாம்பழங்களும், வாழைப் பழங்களும் இருந்தன. சிறார் இருவரும் சுனை நீரைப் பருகிவிட்டு பழங்களை உண்ணத் தொடங்கினர். குளிர்ச்சியாக இருந்த மொட்டைப் பாறை மெதுவாக சூடேறிக் கொண்டிருந்தது.

“பாறை சூடாகிறது, நாம் மர நிழலுக்குச் செல்வோம் வாருங்கள்” என ஒரு பெரிய வேங்கை மர நிழலுக்கு அழைத்துச் சென்றார் தவ்வை.

கைகளைக் கழுவச் சென்ற நந்தன் சுனை நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதைப் பார்த்து வியப்படைந்தான். “நீர் குளிர்ந்திருக்கிறது, குளிர்ந்த காற்றும் அடிக்கிறது ஆனால் பாறையும், மண்ணும் ஏன் வெப்பமாக இருக்கிறது?” என்றான்.

“சூரிய ஒளியை உள்வாங்கும் நிலம் வெப்பமடைகிறது. நிலத்திற்கு வெப்பத்தை தன்னகத்தே கொள்ளும் திறன் குறைவு என்பதால் உள்வாங்கிய வெப்பத்தை விரைவாக வெளியிடுகிறது. இக்காரணங்களால் தான் பாறை வேகமாக சூடாகிறது.” என்றார் தவ்வை

“ஆனால் சிறிது நேரம் முன்பு சூரிய ஒளி விழுந்து சூடாக இருந்த பாறை வேங்கை மர நிழலில் ஏன் குளிர்ந்து விட்டது?” என்றாள் வானதி

“நிழலில் இருக்கும் பாறையின் மேல் ஒளி விழுவதில்லை. முன்பு சூரிய ஒளியால் வெப்பமடைந்த பாறை, நிழலி்ல் விரைவாக வெப்பத்தை சுற்றுப்புறத்துக்கு வெளியிடுவதால் சூடு குறைகிறது. பாறை நிழலில் இருக்கும் போது விரைவாக குளிர்ந்து விடுகிறது.” என்றார் தவ்வை

“பாறை வெளியிடும் வெப்பம் எங்கு செல்கிறது?” எனக் கேட்டான் நந்தன்

“பாறை மட்டுமல்ல, சூரிய ஒளியால் சூடான நில மேற்பரப்பும் வெப்பத்தை காற்றுக்குக் கடத்துகிறது. காற்று மற்றும், சூரிய ஒளியால் சூடான கடலின் மேற்பரப்பு நீரும் வெப்பத்தை தொடர்ந்து மிகக் குளிரான இடங்களுக்குக் கடத்துகின்றன.”

“மிகக் குளிரான இடங்கள் என்றால் துருவங்கள் தானே? ” என்றாள் வானதி

“ஆம், உறைபனி சூழ்ந்த துருவங்கள் தான். துருவங்களுக்கு கடத்தப்படும் வெப்பம் கோடையில் உறைபனியை உருக்குகிறது. குளிர் காலத்தில் துருவங்களில் நீர் மீண்டும் உறைந்து விடுகிறது”

“இந்த சுழற்சியும், மழைப்பொழிவு போன்ற வானிலை நிகழ்வுகளும் புவியின் தன் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க உதவுகிறது. உயிர்கள் இப்புவியில் நிலைத்திருக்க இந்த சீரான வெப்பநிலையே பெருமளவில் பங்களிக்கிறது” என்றார் தவ்வை.

“இதைப் பற்றி நாம் நாளை விரிவாகப் பேசுவோம். இன்றைய கேள்வி ‘உங்களால் அவனைப் பார்க்க முடியாது,  உணர மட்டுமே முடியும்’. இதற்கான விடையை நாளைக் காட்டிற்கு அருகில் உள்ள புல்மேட்டிற்குக் கொண்டு வாருங்கள்” எனக் கூறியவாறே காட்டுக்குள் சென்று மறைந்தார் தவ்வை

தவ்வை யாராக இருக்கும் என்ற யோசனையுடனே நந்தனும் வானதியும் வீடு திரும்பினர்.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started