4. பருவங்கள்

வீடு திரும்பிய நந்தனும் வானதியும் மாலையில் மற்ற சிறார்களுடன் விளையாடச் சென்றனர். அங்கு கண்ணாமூச்சி, ஒளிகண்டு, தொட்டு விளையாட்டு என பல விளையாட்டுக்களை விளையாடினர்.

சில சிறுவர்கள் தனியாக ஒரு விளையாட்டை ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் வானதிக்கு தவ்வையின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.

அடுத்த நாள் காலை உணவை முடித்த பின் மலையடிவாரத்தை நோக்கி இருவரும் கிளம்பினர். அங்கிருந்த பெரிய வேப்பமர நிழலில் தவ்வை ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்

“வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு”

“இது என்ன பாடல்? இதன் பொருள் என்ன?” என இருவரும் வினவினர்.

“இந்தப் பாட்டை எழுதியவர் நல்லூர் நத்தத்தனார். இப்பாட்டு சிறுபாணாற்றுப்படை எனும் சங்க நூலில் வருகிறது. அண்டவெளியில் சூரியனைச் சுற்றி கோள்கள் இருக்கின்றன என்பது இதன் பொருள். சரி, நேற்றைய விடுகதைக்கு என்ன பதில்? ” என்றார் தவ்வை.

“பம்பரம்” எனக் கூவினர் இருவரும்.

“சரியான விடை. பம்பரம் தன்னைத் தானே சுற்றுவது போல் கோள்களும் சுற்றுகின்றன. பம்பரம் ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து கொண்டே சுழல்வது போல் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புவியின் இந்த நகர்வும், சாய்ந்திருக்கும் புவியின் சுழலும் அச்சும் பருவங்களை உருவாக்குகிறது” என்றார் தவ்வை.

“சுழலும் அச்சு நேராகத்தானே இருக்கும்?”

“நீங்கள் பம்பரம் சுற்றுவதைப் பார்த்தீர்கள் அல்லவா? அதன் மேல் முனை நேராக எப்போதும் இருந்ததா?”

“இல்லை, அது பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே இருந்தது” என்றான் நந்தன்

“அது போலத் தான் புவியின் அச்சும் தான் சுழலும் பாதைக்கு ஏற்ப நேர்கோட்டில் செங்குத்தாக இல்லை. மாறாக சிறிது சாய்ந்து உள்ளது. இந்த சாய்மானமே பருவங்களை உருவாக்குகிறது”

“புவியின் சுழலும் அச்சு எப்படி பருவங்களை உருவாக்கும்?”

“புவியின் சுழற்சி அச்சு சாய்ந்திருப்பதால் சூரிய ஒளி அனைத்து இடங்களுக்கும் சமமாக கிடைப்பதில்லை. வட துருவ கோடைக்காலத்தில் புவியின் வட அரைக்கோளம் அதிக சூரிய ஒளியைப் பெற்று வெப்பமாக இருக்கும். அப்போது தென் அரைக்கோளம் சூரிய ஒளியைக் குறைவாகப் பெற்று குளிர்காலத்தில் இருக்கும். புவி சூரியனைச் சுற்றி நகர்ந்து நேர் எதிர் நிலையில் இருக்கும் போது தென் துருவம் அதிக சூரிய ஒளியைப் பெற்று கோடைக் காலத்தில் இருக்கும், வட துருவம் குறைந்த சூரிய ஒளியைப் பெற்று குளிர்காலத்தில் இருக்கும். இந்தப் பருவ சுழற்சி பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.” என்றார் தவ்வை.

“நீங்கள் இரண்டு பருவங்களைப் பற்றி மட்டுமே கூறினீர்கள் இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என நமக்கு ஆறு பருவங்கள் உள்ளன. மற்றவருக்கோ கோடை காலம், இலையுதிர்காலம், குளிர்காலம், வசந்தம் என நான்கு பருவங்கள் உள்ளன” என்றான் நந்தன்.

“பருவங்கள் இடத்திற்கு ஏற்ப மாறும். துருவங்களில் குறுகிய கோடைக்காலம், மிக நெடிய குளிர்காலம் என இரண்டு மட்டுமே உள்ளன. துருவங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் கோடைக்கும் பின் இலையுதிர் காலம், குளிர்காலத்துக்குப் பின் வசந்த காலம் என நான்கு பருவங்கள் உள்ளன”

“தமிழகத்தில் ஆறு பருவங்கள் உள்ளன. மத்திய ரேகைப் பகுதிகளில் கோடைக்கும், குளிர்காலத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்காது” என்றார் தவ்வை

“ஏன் மத்திய ரேகைப் பகுதிகளில் பருவ வேறுபாடு இல்லை?”

“புவியின் மத்தியப் பகுதி எந்த அரைக்கோளத்தில் இருந்தாலும், அது அதிக சூரிய ஒளியைப் பெறும். அங்கு வெப்பம் எப்போதும் அதிக அளவில் இருப்பதால் பருவங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்காது.”

“இங்கு சேரும் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்குமே?”

“கடல் நீரும், காற்றும் மத்திய ரேகையில் சேரும் வெப்பத்தை குளிர்ந்த இடங்களுக்கு கடத்துகின்றன. இதனால் புவியில் வெப்பம் அனைத்து இடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு புவியின் சராசரி வெப்பநிலையும், பருவங்களும் உயிர்கள் வாழத் தகுந்த அளவில் உள்ளன” என்றார் தவ்வை

“பருவங்கள் எப்படி உயிர்கள் வாழ உதவி புரிகின்றன?”

“பருவங்கள் இல்லையென்றால் எப்போதும் அதிக சூரிய ஒளியைப் பெறும் புவியின் மத்திய பகுதியில் எந்நேரமும் கடும் கோடையும், துருவங்களுக்கு கீழ் உள்ள மித குளிர் பகுதிகளில் கடும் குளிரும் நிலவும். இதனால் உயிர்கள் வாழ முடியாத இடமாக புவி மாறிவிடும்.” என்றார் தவ்வை

“இன்று நிறைய நேரம் பேசிவிட்டோம். பொரிப் போலப் பூவிருக்கும், பொட்டு போல இலை இருக்கும். காயை சாப்பிடலாம் .ஆனால் பழத்தை சாப்பிட முடியாது. இதற்கான பதிலுடன் நாளை அந்த மொட்டைப் பாறையில் என்னைச் சந்திக்கவும். வெயில் அதிகமாக இருப்பதால் அதிகாலையிலே வந்து விடுங்கள்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார் தவ்வை.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started