மறுநாள் காலை, பொழுது விடிவதற்குள்ளாகவே கிளம்பி விட்ட நந்தனும், வானதியும் மலையை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஆனால் தவ்வையின் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. போகும் வழியில் மலையடிவாரத்தில் ஒரு எள் வயலில் பாட்டி ஒருவர் களை எடுப்பதைப் பார்த்தவர்கள், பாட்டியிடம் பதில் இருக்கலாம் என அவரிடம் சென்றனர்.
கேள்வியைக் கேட்ட பாட்டி, வயலின் வேலியோரத்தில் வளர்ந்திருந்த ஒரு மரத்தைக் காட்டி அந்த மரம் தான் தவ்வையின் கேள்விக்குப் பதில் என்றார். மரத்தை உற்று நோக்கியவர்களுக்கு அது விடத்தலை மரம் என தெரிந்தது.
பாட்டிக்கு மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லிவிட்டு ஓடை வழியாக காட்டிற்குள் சென்றனர். மிகப் பெரும் மரங்களுக்கிடையே ஊடுருவிய காலைப் பொழுதின் ஒளி ஓடை நீரில் பட்டு ஓடும் நீர் பல வண்ணங்களில். வானவில் போல் காட்சியளித்தது.
சிறிது தொலைவில் மிகப் பெரிய கடம்ப மரத்தடியில் தவ்வை அவர்களுக்காக நாவல் மற்றும் நெல்லிப் பழங்களுடன் காத்திருந்தார். தவ்வையை கண்டதும் விடத்தலை என்று கூவிக் கொண்டே அருகில் ஓடினர்.
“நன்று குழந்தைகளே, சரியான பதிலைக் கண்டுபிடித்து விட்டீர்கள். இப்பழங்களை உண்டு, ஓடை நீரை பருகுங்கள். பிறகு நாம் உரையாடலைத் தொடங்கலாம்” என்றார் தவ்வை.
நந்தனோ “நாம் உரையாடிக் கொண்டே உண்ணலாம்” எனக் கூறவே தவ்வை புவியின் ஆற்றலுக்கு ஆதாரமான ஒளியைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.
“சூரிய ஒளி புவியை விடப் பழமையானது. புவியில் நடக்கும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு சூரிய ஒளியே ஆதாரம். சூரிய ஒளி இல்லையென்றால் இந்த புவி உயிர் இல்லாத உறை பனி கோளாகத் தான் இருந்திருக்கும்” என்றார்.
“சூரிய ஒளி எப்படி புவிக்கு ஆற்றலை வழங்குகிறது?” என்றாள் வானதி
“சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளியானது வெப்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புவியின் மேற்பரப்பில் படும் சூரிய ஒளி வெப்ப ஆற்றலாக மாறுவதால் தான் புவிக்கு பெருமளவில் ஆற்றல் கிடைக்கிறது. இந்த வெப்ப ஆற்றலை நீரும், நிலமும், காற்றும் உள்வாங்குகின்றன. இந்த வெப்ப ஆற்றலின் மூலமே காற்று நகர்கிறது, நீர் வானிலையைத் தீர்மானிக்கிறது” என்றார் தவ்வை.
“ஆம், நமக்கு கிடைக்கும் ஆற்றலும் மறைமுகமாக சூரிய ஒளியில் இருந்து உருவாக்கப்பட்டதே. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் நீர் காற்று, நிலத்தை இணைத்து உணவை உருவாக்குகின்றன. இதுவே பெரும்பான்மையான உயிர்களுக்கு ஆதாரம்” என்றாள் வானதி.
“நன்றாகச் சொன்னாய் வானதி. புவியின் சுழற்சியால் சூரிய ஒளி புவியின் மேற்பரப்பில் விழுகிறது. பகலில் வெப்பமடையும் இடம் இரவில் குளிர்ந்து விடுகிறது.”
“சூரிய ஒளி அனைத்து இடங்களுக்கும் ஒரே அளவில் தினசரி கிடைக்கும் போது பருவங்கள் எப்படி உருவாகின்றன?” என்றான் நந்தன்
“பருவங்கள் உருவாவதற்கு காரணம் புவியின் சுழற்சி அச்சாகும். இதைப் பற்றி நாளை காண்போம்” என்றார் தவ்வை.
அதற்குள் வானதியும், நந்தனும் பழங்களை உண்டு முடித்திருந்தனர். பின்னர் ஓடை நீரைப் பருகிவிட்டு கரைக்குத் திரும்பினர். ஆனால் அங்கு தவ்வையைக் காணவில்லை.
தவ்வையைத் தேடும் போது மரத்தடியில் ஒரு பனையோலை இருந்தது. “தன்னைச் சுற்றி ஆடுவான், ஓரிடத்தில் நில்லாமல் ஆடுவான். இதற்கான் பதிலுடன் நாளை மலையடிவாரத்தில் இருக்கும் வேப்பமரத்தடிக்கு வரவும். இந்த விடுகதையில் பருவங்களுக்கான விடை உள்ளது” என எழுதப்பட்டிருந்தது
Leave a comment