27. தவ்வையின் எச்சரிக்கை

“அறிவியல் மேல் உள்ள நம்பிக்கையை எப்படி தவறு எனக் கூறுகிறீர்கள்?” என்றார் கோதை

“இன்றைய அறிவியலைக் கட்டுப்படுத்துவது பெரும் உற்பத்தி சார்ந்த வணிகமே. லாபம் ஈட்டும் அறிவியல் ஆய்வுகள், அவை தீங்கு விளைவிப்பையாக (அணு ஆயுதங்கள், மரபணு மாற்றம், கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் பல) இருந்தாலும் அவை ஊக்குவிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை சுயவிமர்சனம் செய்யவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அனுமதிக்கப்படுவதில்லை. பல விஞ்ஞான அழிவுத் தொழில்நுட்பங்கள் போருக்காகவும், சுயநலம் சார்ந்த வணிகத் தேவைக்காக உருவாக்கப்படுகின்றன. மக்களுக்கான எளிய அறிவியல், தொழில்நுட்பத் தேவைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதன் மூலம் உருவாகும் தொழில்நுட்பங்கள் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் மேலும் பணம் சேர்க்கவும், அரசுகள் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளவுமே பயன்படுகின்றன” என்றார் தவ்வை

“அரசாங்கம் நடத்தும் அறிவியல் ஆய்வுகளில் இந்தப் பிரச்சினை இருப்பதில்லையே?” என்றார் கோதை

“அறிவியல் பல துறைகளாகப் பிரிந்து கிடக்கிறது. அரசின் கனிம வள ஆராய்ச்சித் துறையின் ஆய்வுகள் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கு நேர் எதிரானவை. என்னைப் பற்றி நடக்கும் ஆய்வுகளும் பல தனித் துறைகளாகவும், எதிரும், புதிருபாகவே செயல்படுகின்றன” என்றார் தவ்வை

“புவியைத் தவிர மற்ற கோள்களில் உயிர்கள் உள்ளனவா?” என்றாள் வானதி

“மற்ற கோள்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை. புவியில் உயிர் வாழ்வதற்கு பல காரணிகள் உண்டு” என்றார் தவ்வை

“மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன, அங்கும் இரவு, பகல் என உள்ளது. மனிதர்களால் அங்கு சென்று வாழ முடியுமே?” என்றார் கோதை

“சூரியனுக்கும் புவிக்கும் இருக்கும் தொலைவால் புவியில் அதீத வெப்பமோ குளிரோ இல்லை. புவியில் மட்டுமே மேற்பரப்பில் உயிர்களுக்கு ஆதாரமான திரவ நீர் உள்ளது. புவியின் வளிமண்டலம் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பை வழங்கி, புவியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இவை அனைத்தும் சேர்ந்த உயிர் வாழத் தகுதியான சூழல் அமைப்பு அண்டவெளியில் உள்ள எந்தவொரு கோளிலும் இல்லை. ஆனால் இந்தப் பாதுகாப்பான புவி பேரழிவின் விளிம்பில் உள்ளது” என்றார் தவ்வை

“மற்ற பேரழிவுகளும் இப்படித் தானே நடந்திருக்கும்?” என்றான் நந்தன்

“இந்த மாற்றங்கள் இயற்கையாக நடக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கும். ஆனால் தற்போது வேகமாக மாறி வரும் வளிமண்டலத்தின் வாயு விகிதம், அதிகரிக்கும் வெப்பநிலை, வேகமாகக் குறையும் துருவப் பனி மற்றும் காடுகளின் பரப்பளவு போன்றவற்றின் விளைவுகள் என்னைப் பெரிய அளவில் பாதித்து என்னுடைய உயிர்களை வாழ வைக்கும் திறனைக் குறைக்கின்றன. இதன் மூலம் முதலில் அழிவைச் சந்தி்க்கப் போவது நவீன மனித நாகரீகமே” என்றார் தவ்வை

“மற்ற விலங்குகளை விட மனித சமூகம் எப்படி விரைவில் அழிவைச் சந்திக்கும்?” என்றார் கோதை

“மனிதர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறைவேற்றுவது நானே. ஆனால் நவீன மனித சமூகத்தின் அடித்தளமான படிம எரிபொருள் ஆற்றல் தரும் வசதிகள் மனிதர்களை என்னிடம் இருந்து வெகு தூரம் கொண்டு சென்றுவிட்டது. இதன் விளைவுகள் என்னுடைய பல எல்லைகளை கடந்து செல்கின்றன. இந்த எல்லைகள் தாண்டப்பட்டால் என்னுடைய இயல்பு பழைய நிலைக்கு திரும்ப முடியாத, முற்றிலும் வேறான இயல்பாக இருக்கும். அங்கு நிலையான பருவங்கள் இல்லாமல் உணவைத் தட்டில் எதிர்பார்க்கும் நவீன சமூகம் சீர் கெடும் ” என்றார் தவ்வை

“வருங்காலத்தில் நவீன சமூகம் சீர்கெட்டு மனிதர்கள் மொத்தமாக அழிவார்கள் எனக் கூறுகிறீர்களா?” என்றார் கோதை

“வருங்காலத்தை உறுதியாக யாராலும் கணிக்க முடியாது. இன்றைய அறிவியல் ஆய்வுகள், கடந்த கால நிகழ்வுகளை வைத்து வருங்காலத்தை அனுமானிக்கும் போது தெளிவான நிகழ்வு ஒன்று புலப்படுகிறது. அது குறைந்த எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் இயற்கையிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் பெரும்பாடு படுவார்கள். ஏனென்றால் புவியில் இருக்கும் படிம எரிபொருளின் அளவு வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது, அதே நேரத்தில் மக்கள் தொகையும் குறைகிறது” என்றார் தவ்வை

“மக்கள் தொகை அதிகரிக்கத் தானே செய்கிறது?” என்றாள் வானதி

“புவியில் அதிகரிக்கும் மாசு, வெப்பம், நோய் ஆகியவற்றாலும் சமூக மாற்றங்களாலும் மக்கள் கருவுறுதல் விகிதம் வேகமாகக் குறைகிறது. விரைவில் ஆற்றல் உற்பத்தியும் குறைந்து, அதிக அளவில் மூத்த குடிமக்கள் மட்டுமே வாழும் இடமாக புவி மாறும்” என்றார் தவ்வை

“அப்படிப்பட்ட சூழலில் நாங்கள் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?” என்றான் நந்தன்

“மனிதர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது கூட்டுறவும், ஒற்றுமையுமே. அதுவே இனி வரும் இக்கட்டான காலங்களில் உதவும். வானிலை, வேளாண்மை, விதைகள், விலங்குகள், இயற்கை குறித்த அறிவும், வாழ்க்கைக்குத் தேவையான நீச்சல், மரம் ஏறுதல், வலுவான உடல், மன உறுதி, எளிய அறிவியல் ( தச்சு, கட்டுமானம், நெசவு மற்றும் பல) போன்றவற்றையும் கற்றுக் கொள்வது நலம்” என்றார் தவ்வை

“வருங்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது” என்றார் கோதை

“கவலை கொள்வதை விட்டு நிகழ்காலத்தை அடுத்த தலைமுறை வாழ்வதற்கான முயற்சிகளி்ல் மக்கள் ஈடுபட வேண்டும். பேராசைகளைத் துறந்து, தமது தேவைகளைக் குறைத்து, என்னுடன் இணைந்த எளிய இயற்கை சுழற்சிக்கு உட்பட்ட வாழ்க்கைக்கு மக்கள் மாற வேண்டும். இது வரும் தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும். இனி சில காலத்திற்கு உங்களை நான் சந்திக்க இயலாது அதனால் தற்போது விடை பெறுகிறேன்” என்றார் தவ்வை

“நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்றாள் வானதி

“உலகம் முழுவதும் உங்களைப் போன்ற இளம் தலைமுறையினர் உள்ளனர். அவர்களிடமும் நான் உரையாட வேண்டும்” என்றார் தவ்வை

“கடைசியாக ஒரு விடுகதைக்கு பதில் சொல்லிவிட்டுப் போங்கள்” என்றாள் வானதி

“முதல் நாள் தாய் இனிப்பாள், மறுநாள் மகள் புளிப்பாள், அதற்கடுத்த நாள் பேத்தி மணப்பாள். இவர்கள் யார்?” என்றான் நந்தன்

“பால், தயிர், நெய் தான் விடை. yeast எனும் நுண்ணுயிர் உயிர் வேதியல் மாற்றம் மூலம் பாலைத் தயிராக மாற்றுகிறது. இது பல லட்சம் ஆண்டுகளாக நடக்கும் இயற்கை நிகழ்வு. நெய் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளே ஆகிறது” எனக் கூறி விடை பெற்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started