“நாம் காலநிலை பிறழ்வின் விளைவுகளில் இருந்து தப்பிக்க ஒரு சிறு சமூகமாக என்ன செய்யலாம்?” எனக் கேட்டார் கோதை
“மக்கள் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான காற்று, நீர், உணவு, உறைவிடம், உடை அனைத்துமே இன்று பாழடைந்துவிட்டன, அவற்றின் மேல் இருந்த சம உரிமையையும் மக்கள் இழந்துவிட்டனர். இனி உணவும், நீரும், உடையும் எங்கிருந்தும் வராது என்ற காலகட்டத்தில் உள்ளோம். எனவே இவற்றிற்கான பாதுகாப்பை மக்கள் இயற்கையிடம் அடையவேண்டும்” என்றார் தவ்வை
“இயற்கையிடம் எப்படி மனிதர்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?” என்றார் கோதை
“மனிதர்கள் இயற்கையை எதிரியாகவும், இயற்கை மேல் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இயற்கை தங்கள் சொல் படி நடக்கும் தலையாட்டி பொம்மை என நினைக்காமல், ஒரு உற்ற தோழனாக நினைத்து மதித்து நடத்தினால் இயற்கையிடம் இருந்து பல்வேறு பாதுகாப்புகளைப் பெறலாம்” என்றார் தவ்வை
“இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா?” என்றான் நந்தன்
“இயற்கையை பெரும் துன்பத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கும் எளிய உயிரினமாக நினைத்து, அதை மனித ஆற்றல் கொண்டு காப்பது மனிதர்களின் கடமை எனப் பலர் நினைக்கின்றனர். இதுவும் இயற்கை மேல் ஆதிக்கம் செலுத்தும் நமது சுயநலமான மனநிலையே” என்றார் தவ்வை
“இயற்கையைக் காப்பாற்ற வேண்டாம், ஆனால் காலநிலைப் பிறழ்வுக்கான தீர்வுகளை எப்படி அடைவது?” என்றார் கோதை
“தீர்வுகளை அடைய மக்கள் இயற்கையை துணைக்கு அழைக்க வேண்டும், இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். இது அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தவரை சார்ந்திராமல் வாழ வழி செய்யும்” என்றார் தவ்வை
“இயற்கையில் மனிதர்கள் வாழ என்ன தீர்வுகள் உள்ளன? உணவும், நீரும் வேறெங்கோ இருந்தல்லவா வருகிறது?” என்றான் நந்தன்
“இன்றும் பெரும் பொருள் உற்பத்தி (உணவில் இருந்து மின்ணணு சாதனங்கள் வரை) புவியின் சீரான வெப்பநிலை மற்றும் பருவங்களை நம்பியே உள்ளது. சமீப காலமாக அதிகரிக்கும் வெப்பம் கடும் வெப்ப அலை, நீர்த் தட்டுப்பாடு, வறட்சி, வெள்ளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதால் பொருள் உற்பத்தி வேகமாகக் குறைகிறது. நவீன மனித சமூகத்தின் வளர்ச்சி பெரும் உற்பத்தியை நம்பியே உள்ளது. இதைச் சாராமல் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்றார் தவ்வை
“அடுத்தவரைச் சாராமல் எப்படி வாழ முடியும்? அனைத்தையும் ஒருவரால் உற்பத்தி செய்ய முடியாது” என்றார் கோதை
“மக்கள் உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகளை எளிதாக தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். குழாய் மூலம் வரும் குடிநீருக்கு சார்ந்திராமல் அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளில் (கிணறு, குளம், ஏரி, ஆறு) இருந்து பெறலாம். எங்கிருந்தோ வரும் உணவை தவிர்த்து மக்களே உணவுத் தயாரிப்பில் இறங்கலாம். முடியாதவர்கள் சமூகத்தில் ஏற்கனவே இயற்கையான முறையில் உணவு உற்பத்தி செய்பவரிடம் இருந்து உணவைப் பெறலாம். பருத்தி உடைகளை நேரடியாக நெய்பவரிடம் இருந்து வாங்கி அணியலாம். கான்கிரீட் வீடுகளைத் தவிர்த்து காற்றோட்டமான ஓட்டுவீடுகள், கூரைவீடுகளில் வசிக்கலாம். இவற்றிற்கான உற்பத்தி ஆதாரம் இயற்கையில் ஏராளமாக உள்ளது ஆனால் மக்களின் கண்களுக்குத் தெரிவதில்லை” என்றார் தவ்வை
“மரம் வளர்த்து காடுகளை உருவாக்கலாமே?” என்றாள் வானதி
“மனிதர்களால் காடுகளை உருவாக்க முடியாது. மனிதர்களின் மரம் வளர்ப்பு அவர்களின் சுயநலம் சார்ந்தது. அதனால் தோப்புகள் மட்டுமே உருவாகும். அது போன்ற தோப்புகளை இயற்கையிடம் ஒப்படைத்தால் அது அந்த இடத்திற்கான காடாக மாறும். மக்கள் இருக்கும் காடுகளை, மலைகளை, ஆறுகளை, கடலைப் பாதுகாத்தாலே இவற்றின் பரப்பளவும், இயல்பும் மாறி மெதுவாக கரிம உமிழ்வு குறையும். நமக்கு அதிக அளவில் தேவை புலிகள் காப்பகங்கள் அல்ல, நரிகள் காப்பகங்களே” என்றார் தவ்வை
“அப்போது புலிகள் தேவை இல்லையா?’ என்றான் நந்தன்
“மக்களுக்கு சுற்றுச்சூழல் என்றாலே வெகுதொலைவில் உள்ள அடர்ந்த காடுகளும் அதில் வாழும் அதிசய விலங்குகளும் தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் மக்கள் வாழ்விடமே பல வகை உயிர்கள் வாழும் பெரும் சுற்றுச்சூழலாக இருந்தது. அங்கு பல வகைக் காடுகளும், அவற்றில் வாழ்ந்த நரி, கானமயில், நீர்நாய் போன்ற உயிரினங்களும் இருந்தன. இன்று அது போன்ற காடுகளும் இல்லை, விலங்குகளும் இல்லை. மீண்டும் மக்கள் வாழ்விடங்களில் காடுகளும், உயிர்ப்பன்மையமும் உருவாகும் சூழலை மக்கள் உருவாக்க வேண்டும். குறிப்பாக கானுயிர் சுற்றுலா, மதச் சுற்றுலா எனும் பெயரில் அறிமுகமில்லாத காடுகளுக்குச் சென்று அவற்றின் அழிவை உறுதிப்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் ” என்றார் தவ்வை
“எங்களின் தினசரி வாழ்வில் என்ன செய்தால் எங்களின் கரிம உமிழ்வு குறையும்?” என்றாள் வானதி
“காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை உங்கள் ஆற்றல் பயன்பாடு (மின்சாரம், கச்சா எண்ணெய் பொருட்கள், உணவு, நீர்), நீங்கள பயன்படுத்தும் பற்பசை, சோப், ஷாம்பூ, உடை, போக்குவரத்து, கழிவு மேலாண்மை, வெளியே செல்லும் நெகிழி, வீட்டிற்கு வெளியில் உண்ணப்படும் உணவு போன்றவற்றின் பின் இருக்கும் கரிம உமிழ்வை, உடல்நலக் கேடு மற்றும் சூழல் கேட்டைக் கணக்கெடுங்கள். பின் இதற்கான தீர்வுகளை நீங்கள் எளிதாக அறியலாம்” என்றார் தவ்வை
“இத்தனை நாளாக புவியின் இயக்கம், காலநிலைப் பிறழ்வின் மூலம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கினீர்கள் ஆனால் உங்கள் பெயர் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் யார் எனச் சொல்லுங்கள்” என்றான் நந்தன்
“நாளை உங்கள் வீட்டருகே இருக்கும் சிறு நெல்லி மரத்தடிக்கு வாருங்கள், என்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார் தவ்வை
Leave a comment