“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு முக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே என்று ஐம்புல அறிவைக் கூறிவிட்டுப் பின்னர், ஆறறி வதுவே அவற்றொடு மனனே” எனப் பாடிக் கொண்டிருந்தார் தவ்வை
“இந்தப் பாடலுக்கு என்ன பொருள்?” என்றான் நந்தன்
“இந்தத் தொல்காப்பியப் பாடல் உயிர்களை தொடு உணர்ச்சி மட்டுமே உள்ள, புவியில் முதலில் தோன்றிய எளிய ஓரறிவு உயிரினங்களில் இருந்து மன உணர்ச்சி வரை உள்ள ஆறறிவு உயிரினங்களான மனிதர்கள் வரை வகைப்படுத்துகிறது” என்றார் தவ்வை
“புவியில் எப்போது உயிரினங்கள் உருவாகின?” என்றாள் வானதி
“முதலில் புவி எப்படி உருவானது எனத் தெரிந்து கொள்வோம். புவியும், மற்ற கோள்களும் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருவெடிப்பில் உருவாகின. தொடக்கத்தில் புவியின் எரிமலை வெடிப்பு மற்றும் விண்கற்கள் மோதியதின் மூலம் புவியின் ஆழத்தில் இருந்து வாயுக்கள் வெளியேறி ஆதிகால வளிமண்டலத்தை உருவாக்கின. அப்போது வளிமண்டலத்தில் உயிர்வளி இல்லை. அங்கு கரியமில வாயு, நீராவி, அம்மோனியா, மீதேன் போன்ற வாயுக்களே இருந்தன. காலப்போக்கில், பூமி குளிர்ந்து, திடமான மேற்பகுதி உருவாகி, திரவ நீர் மேற்பரப்பில் சேர்ந்து கடல் உருவானது. ஒளி வேதியல் மாற்றம் (photo chemical reaction) மற்றும் புவி வேதியல் மாற்றம் (geochemical reaction) மூலம் புவியின் முதல் உயிரினமான ஒரு செல் உயிரினங்கள் உருவாகின. அப்போது தான் என் கதையும், உயிர்களின் வளர்ச்சியும் தொடங்கியது” என்றார் தவ்வை
“உயிர்வளி இல்லாமல் உயிர் எப்படி உருவாகியது?” என்றான் நந்தன்
“புவியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளி இல்லாத கடல்களின் ஆழத்தில், முதன் முதலாக உருவான உயிரினம் கரியமில வாயுவை உண்டு உயிர் வேதியல் மாற்றம் (biochemical reaction) மூலம் தான் உயிர் வாழ ஆற்றலை உருவாக்கி, கழிவாக மீதேனை உருவாக்கியது. மீதேன் அதிக அளவில் வெப்பத்தை புவியில் தேக்கியதால் புவியின் வெப்பம் அதிகரித்து, ஒரு செல் உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது” என்றார் தவ்வை
“இன்றும் இவை உள்ளனவா?” என்றான் நந்தன்
“மீதேனை வெளியிடும் ஆதி நுண்ணுயிர்கள் இன்றும் சூரிய ஒளி இல்லாத ஆழ்கடலில் இருந்து உயிர்வளி இல்லாத மனிதர்கள் மற்றும் பல விலங்குகளின் வயிறு வரை பரவி வாழ்கின்றன” என்றார் தவ்வை
“இன்றைய உயிரினங்கள் உயிர்வளி மற்றும். கரியமில வாயு சுழற்சியானால் தானே உயிர் வாழ்கின்றன?” என்றார் கோதை
“ஆம். மீதேன் உமிழும் நுண்ணுயிர்கள் உருவாகிய பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மீதேனை உருவாக்கும் உயிர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உயிர்வளியின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இது ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றலை உருவாக்கி உயிர்வளியை கழிவாக வெளியிடும் நுண்ணுயிர்களை உருவாக வாய்ப்பளித்தது. இதுவே இன்றைய உலகில் உள்ள உயிர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை” என்றார் தவ்வை
“இதில் உங்கள் கதை எப்படி தொடங்கியது?” என்றாள் வானதி
“புவியின் முதல் உயிர்கள் சுற்றியுள்ள உயிரற்ற சூழலுடன் தொடர்புகொண்டு, புவியில் உயிர்களின் வாழ்வை சாத்தியமாக்கும் காலநிலை மற்றும் உயிர்வேதியியல் நிலைமைகளைத் தொடக்கத்தில் உருவாக்கியது. பிறகு தோன்றிய பல கோடி உயிர்களும் உயிரற்ற சூழலும் சேர்ந்த அமைப்பு புவியின் சூழலை, முக்கியமாக புவியின் வெப்பநிலையை, உயிர்கள் வாழக்கூடியதாக வைத்திருக்க பல கோடி ஆண்டுகளாக செயல்படுகிறது. புவியின் உயிர்களுக்கு ஆதாரமான உயிரற்ற அங்கங்களும், உயிர்களும் சேர்ந்த அமைப்பை பூமித்தாய், Pacha Mama, Rhea, Gaia என பல பெயர்களில் உலகம் முழுக்க ஆதி மனிதர்கள் அழைத்தார்கள். தமிழகத்தில் என்னை தவ்வை என அழைத்தார்கள். தற்போது பொதுவாக இயற்கை என அழைக்கிறார்கள்” என்றார் தவ்வை.
“அப்படியானால் நீங்கள் கடவுளா?” என்றாள் வானதி
“கடவுள் புவியில் மனிதர்கள் வந்த பிறகே தோன்றினார். நான் புவியின் முதல் நுண்ணுயிர் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருக்கிறேன். இது வரை ஐந்து பேரழிவுகளை நிகழ்த்தி, பல கோடி உயிரினங்களை அழித்து உள்ளேன். பல புதிய உயிரினங்கள் தோன்றுவதற்கும் காரணமாக உள்ளேன்” என்றார் தவ்வை
“எதற்காக இந்தப் பேரழிவை நடத்தினீர்கள்?” என்றான் நந்தன்
“ஒரு அமைப்பாக இயங்கும் எனக்கு சில எல்லைகள் உண்டு. இந்த எல்லைகள் ( வளிமண்டல வாயு விகிதம், வெப்பநிலை, கடல் மட்டம், கடலில் உள்ள உப்பின் விகிதம் மற்றும் பல) தாண்டப்படும் போதும், எரிமலை வெடிப்புகள், விண்கற்கள் தாக்குதல் போன்ற விபத்துகள் நடக்கும் போதும் எனது இயல்பு அதிக அளவில் மாறுகிறது. இந்த மாற்றத்தை தாங்க முடியாத உயிரினங்கள் அழிகின்றன. மாற்றத்தை தாக்குப் பிடிக்கும் உயிரினங்கள் வளர்ச்சி அடைகின்றன. இந்தச் சுழற்சி இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடக்கும்” என்றார் தவ்வை
“எங்களை ஏன் நீங்கள் சந்தித்து உரையாடினீர்கள்?” என்றாள் வானதி
“இது வரை நிகழ்ந்த பேரழிவுகள் அனைத்தும் இயற்கைக் காரணிகளாலும், சில விபத்துக்களால் மட்டுமே நிகழ்ந்தது. ஆனால் மனிதர்களின் பேரழிவுக்கு அவர்களின் வாழ்க்கைமுறையே காரணம். இதனால் எனது இயல்பு வெகு வேகமாக மாறுகிறது. இதனால் புவியில் உயிர்களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்கு பேரழிவு நடக்கும் வாய்ப்பு அதிகம். இதை மனித குலத்தின் வருங்கால தலைமுறையிடம் கூறி எச்சரிக்கலாம் என வந்தேன்” என்றார் தவ்வை
“புவியில் மனிதர்கள் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இது வரை புவியில் வாழ்ந்து மறைந்த உயிர்களை விட மனிதர்கள் மேலானவர்கள். மனிதர்கள் தங்கள் அறிவாலும், முயற்சியாலும் இயற்கையின் எல்லைகளைத் தாண்டி இங்கும் வாழ முடியும், வேறு கோள்களில் கூட வாழ முடியும்” என்றார் கோதை
“மனிதர்களின் ஆணவமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மேல் உள்ள அதீத நம்பிக்கையும் அவர்களை அழித்துவிடும்” என்றார் தவ்வை
Leave a comment