மதிய உணவு உண்ட பின் உரையாடல் மீண்டும் தொடங்கியது
“செயற்கை மழை, அண்டவெளியில் சூரிய ஒளியை பிரதிபலிக்க பெரும் கண்ணாடிகள் மற்றும் காற்றில் கந்தகத்தை கலப்பது,
காற்றில் இருக்கும் கரிமத்தை செயற்கயாகப் பிரித்து நிலத்திற்கு அடியில் சேர்ப்பது, வறட்சியை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகள் போன்ற பல தொழில்நுட்பத் தீர்வுகள் உள்ளனவே” என்றார் கோதை
“இது போன்ற தொழில்நுட்பங்கள் அதிக ஆற்றல் கோருபவையாக உள்ளன. இவற்றை பயன்படுத்துவதின் மூலம் கரிம உமிழ்வு தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் இவற்றின் இயல்பே இயற்கையின் செயற்பாட்டை மாற்றுவதாக உள்ளது. இதன் மோசமான பின் விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது” என்றார் தவ்வை
“பிறகு ஏன் இது போன்ற திட்டங்கள் தீர்வுகளாக முன் வைக்கப்படுகின்றன?” என்றாள் வானதி
“தொழில்நுட்பத்தின் மேல் உள்ள அதீத நம்பிக்கை, வசதிகள் குறைந்த எளிய வாழ்வு மனித இனத்தை பின்னோக்கிச் செலுத்தும் என்ற மனோபாவம், எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வது போன்ற சிந்தனைகளால் இது போன்ற தொழில்நுட்ப த் திட்டங்கள் பல செல்வந்தர்களாலும், விஞ்ஞானிகளாலும் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன” என்றார் தவ்வை
“அரசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலநிலப்பிறழ்வு குறித்து கூடிப் பேசுகின்றனவே?” என்றார் கோதை
“1979 ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த முதல் கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொண்டன. இது வரை 27 மாநாடுகளில் மேலும் பல புதிய நாடுகள் பங்கேற்று, அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றம் குறித்து கவலை கொள்வதாகாவும், கரிம உமிழ்வை குறைப்பதற்கு வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச மட்டுமே செய்துள்ளன. 800000 ஆண்டுகளாக காற்றில் 250 ppm என இருந்த கரியமில வாயுவின் அளவு, தொழிற்புரட்சிக்கு பிறகு தொடர்ந்து அதிகரித்து 2023 ஆண்டு424 ppm ஆக உள்ளது. இதன் விளைவாக வெப்பமும் அதிகரித்துள்ளது” என்றார் தவ்வை
“பல பொருளாதாரத் தீர்வுகளை பலர் முன் வைக்கின்றனரே?” என்றார் கோதை
“பொருளாதாரமும், ஆற்றல் உற்பத்தியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. கரிம உமிழ்வை வெளியிடும் பொருளாதார முறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள் கரிம உமிழ்வைக் குறைக்காது” என்றார் தவ்வை
“காலநிலைப் பிறழ்வைத் தடுக்க வேறு என்ன தான் தீர்வு?” என்றான் நந்தன்
“ஆற்றல் உற்பத்தி, தொழில், போக்குவரத்து, உணவு உற்பத்தி, கழிவு மேலாண்மை, நுகர்வு, வாழ்க்கை முறை, இயற்கையை மனிதர்கள் நடத்தும் விதம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் வந்தால் கரிம உமிழ்வு குறைந்து வருங்காலத்தில் வெப்பநிலை மெதுவாகக் குறையும். ஆனால் அதிகரித்த வெப்பநிலையின் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டும்” என்றார் தவ்வை
“கரிம உமிழ்வு உடனடியாகக் குறைந்தால் வெப்பநிலையும் உடனடியாகக் குறையுமே?” என்றாள் வானதி
“புவி என்பது வெப்பத்தேக்க வாயுக்கள் மட்டுமே உள்ள சோதனைக் கூடம் அல்ல. அது பல கோடி உயிர்களையும், உயிர்கள் வாழத் தேவையான இயற்கை அங்கங்களையும் உடையது. ஒரு அங்கத்தின் (இங்கு வெப்பத்தேக்க வாயு விகிதம்) சமநிலை சிறிதளவு அதிகரித்ததும் புவியின் இயக்கத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. வளிமண்டலத்தில் வெப்பத்தேக்க வாயுக்களின் விகிதம் குறைந்தாலும் மீண்டும் புவியின் அனைத்து இயக்கங்களும் சீராக பல காலமாகும்” என்றார் தவ்வை
“தொழில்நுட்ப த் தீர்வுகள் குறையும் நுகர்வுடன் சேர்ந்து இயங்க முடியாதா?” என்றார் கோதை
“தொழில்நுட்பம் சிலரின் லாபத்துக்காக இயங்காமல் மக்களின் தேவைக்கு ஏற்ப, இயற்கைச் சுழற்சிக்கு ஏற்ப, குறைந்த அளவில் இயங்கும் போது பலனளிக்கின்றன.
உள்ளுர் சார்ந்த எளிய வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டால் தேவையற்ற பயணங்கள் குறையும். சிறிய தூரம் பயணிக்க மிதிவண்டி போதும். மாற்று ஆற்றல் மின்சாரத்தை மிகச் சிறிய பகிர்மான அமைப்புகள் (micro grids) மூலம் உள்ளூர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். இதனால் உள்ளூர் வேலைவாய்ப்பு பெருகும், புலம் பெயர்தல் குறையும், மக்களின் வாழ்வு மக்களை நம்பியே இருக்கும்” என்றார் தவ்வை
“அப்படியானால் காலநிலைப் பிறழ்வைத் தடுக்கத் தீர்வுகளே இல்லையா?” என்றார் கோதை
“காலநிலைப் பிறழ்வைத் தடுத்து, மீண்டும் புவியை பழைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு உலகளவில் பல செயல்கள் ஒரே சமயத்தில், அனைவரின் ஒத்துழைப்போடும் அதிவிரைவில் நடக்கவேண்டும். இன்றைய உலகில் அது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஆனால் காலநிலை பிறழ்வின் விளைவுகளில் இருந்து மக்கள் தம்மைக் காத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கலாம்” என்றார் தவ்வை
Leave a comment