“பேருந்தில் இருந்து இறங்கிய மூவரும் நகரத்தில் முதலில் உணர்ந்தது அதீத வெப்பம். நகரத்தின் நுழைவுவாயிலில் தவ்வை காத்துக் கொண்டிருந்த தவ்வையிடம் ” இங்கு ஏன் வெப்பம் அதிகமாக இருக்கிறது” என்றான் நந்தன்.
“கான்கிரீட்டால் கட்டப்படும் சமதளக் கூரைக் கட்டிடங்கள் வெப்பத்தை அதிக அளவில் உள்வாங்கி மிக மெதுவாக வெளியிடுகின்றன. நகரங்களில் மிக நெருக்கமாகக் கட்டப்படும் கட்டிடங்கள் வெளியிடும் வெப்பம் எளிதாக அவ்விடங்களை விட்டு வெளியேறுவதில்லை. இதனால் நகரங்கள் அதன் சுற்றுப்புறத்தை விட வெப்பமாக உள்ளது. இந்த விளைவை வெப்பத் தீவு விளைவு (heat island effect) என அழைக்கிறார்கள்” என்றார் தவ்வை
“நகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகையால் நகரங்கள் விரிவடைகின்றன. மக்கள் தொகை குறைந்தால் பல பிரச்சினைகள் தீரும்” என்றார் கோதை
“ஊர்ப்புறத்தில் இருந்து மக்கள் ஏன் நகரங்களை நாடுகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். மேலும் அதிகரிக்கும் மக்கள் தொகையை விட மக்களுக்கிடையே இருக்கும் பொருளாதார வேற்றுமையே பெரும் பிரச்சினை” என்றார் தவ்வை
“பொருளாதார வேற்றுமை எப்போதும் இருப்பது தானே?” என்றார் கோதை
“ஆம், ஆனால் காலநிலை மாற்றத்தை விளைவிப்பதில் பெரும் பங்கு பணம் படைத்த மேல்தட்டு மக்களையே சாரும். உலகின் பெரும் பணக்காரர்களின் வள நுகர்வு ( உணவு, குடிநீர், உடை, வீடு, வாகனம், போக்குவரத்து மற்றும் பல) உலகின் ஏழை மக்களை விட ஆயிரம் மடங்கு அதிகம். அவர்களின் தொழில்கள் வெளியிடும் கரிம உமிழ்வு ஏழை மக்கள் வெளியிடும் கரிம உமிழ்வை விட பல லட்சம் மடங்கு அதிகம்” என்றார் தவ்வை
“ஆனால் மக்கள் தொகை அதிகமுள்ள, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கரிம உமிழ்வு அதிகம் எனக் கூறுகிறார்களே?” என்றார் கோதை
“தொழில்புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் உமிழப்படும் கரிமத்தின் பெரும் பங்கு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்குமே சேரும். கரிம உமிழ்வில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனாவின் உற்பத்தியின் 80% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இப்பொருட்களின் கரிம உமிழ்வுக்கு காரணம் அமெரிக்கர்களின் நுகர்வு” என்றார் தவ்வை
“அமெரிக்காவிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களின் நுகர்வு குறைவாகத் தானே இருக்கும்?” எனக் கேட்டார் தவ்வை
“உலகம் முழுக்க இருக்கும் 400 கோடி ஏழைகளின் உமிழ்வை விட 8 கோடி செல்வந்தர்களின் உமிழ்வு மிக அதிகம். அதிக அளவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்குக் காரணம் செல்வந்தர்களே. ஆனால் வளச்சுரண்டல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழைகளே” என்றார் தவ்வை
“பொருள் உற்பத்திக்கு, சேவை ஏற்றுமதிக்கு இவை தேவையான ஒன்றல்லவா?” என்றார் தவ்வை
“இயற்கை சுழற்சிக்கு முரணான ஒரு ஏற்றமதிப் பொருள் அல்லது சேவையின் பின் இருக்கும் வளங்கள் மற்றும் உழைப்பையே பல வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 8000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது, அரைக் கிலோ பருத்தி தேவைப்படுகிறது. இப்படி ஒரு பொருளில் மறைந்துள்ள வளமே மறைவளம். தொடர்ந்து நடக்கும் இது போன்ற பொருள் உற்பத்தியால் நம் வளங்களை இழக்கிறோம். இதற்கு சரியான எடுத்துக்காட்டு துணி ஏற்றுமதி தொழிலால் பணம் ஈட்டும் திருப்பூர் நகரமும், ஒரு காலத்தில் திருப்பூர் உருவாகக் காரணமாக இருந்து, இன்று செத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதியுமே” என்றார் தவ்வை
“உலக அரசுகள் நுகர்வை குறைக்க முடியாது, கரிம உமிழ்வை குறைக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம் எனக் கூறுகின்றனவே?” எனக் கேட்டார் கோதை
“உலகின் மொத்தக் கரிம உமிழ்வில் 30% உமிழ்வை நிகழ்த்துபவை 20 பெறு நிறுவனங்கள் ஆகும்.
இவை அனைத்தும் உலக அரசுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருகின்றன, வேலைவாய்ப்பை உருவாக்கின்றன. கரிம உமிழ்வை உடனடியாக நிறுத்துவது பொருளாதாரத் தற்கொலைக்கு சமம். உலகின் மொத்தக் கரிம உமிழ்வில் 5% கரிம உமிழ்வை நிகழ்த்துவது உலகின் ராணுவங்களே. அதனால் தான் எந்த அரசும் உடனடியாக கரிம உமிழ்வை குறைக்க முற்படுவதில்லை” என்றார் தவ்வை
“மனித இனமே அழியும் தருவாயில் இருக்கும் போது பொருளாதாரம் பற்றிக் கவலைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?” என்றாள் வானதி
“அரசுகளும் ஒரு நல்ல தீர்வை எட்ட பலமுறை மாநாடுகளில் கூடி விவாதிக்கின்றனர். ஐநா போன்ற அமைப்புகளும் பல்வேறு பொருளாதார, தொழில்நுட்பத் தீர்வுகளை முன்வைக்கின்றன” என்றார் கோதை
“இவற்றைக் குறித்து மதிய உணவுக்குப் பின் உரையாடுவோம்” என்றார் தவ்வை
Leave a comment