கோதை தன் பிள்ளைகளுடன் மறுநாள் காலை மலைஇடுக்கில் உள்ள சிறிய பள்ளத்தாக்கை அடைந்தார். அங்கு தவ்வை பாறைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
“பாறைகளில் என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள்” எனக் கேட்டான் நந்தன்
“இந்தப் பாறைகள் ஒவ்வொன்றும் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டது போல் உள்ளன. ஒவ்வொரு அடுக்கும் புவியின் ஒரு காலகட்டத்தில் உருவானவை. இவற்றில் இருந்து புவியின் கடந்தகால சுற்றுச் சூழல், பருவநிலை போன்றவற்றை அனுமானிக்கலாம். சில பாறைகள் பெரும் ஊழிக் காலத்தில் உருவானவை” என்றார் தவ்வை
“இது போன்ற ஊழிகள் முன்பே நடந்திருக்கிறதே? டைனோசர் இனம் ஒரு ஊழியில் அழிந்து போயிற்றே?” என்றார் கோதை
“உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனசோர், 16.5 கோடி ஆண்டுகள் வாழ்ந்து 6.6 ஆண்டுகள் முன்பு மறைந்து விட்டன. ஆனால் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புவியில் தோன்றிய நவீன மனித இனம் ( homo sapiens ) கடைசி 500 ஆண்டுகளாக தனக்கான முடிவுரையை எழுதிக் கொண்டுள்ளது” என்றார் தவ்வை
“பரிணாம வளர்ச்சியில் உச்சத்தைத் தொட்ட மனித இனம் எப்படி அழியும்? டைனோசர்கள் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்தைதை விட மனிதர்கள் அதிக காலத்திற்கு வாழ முடியுமே?” என்றார் கோதை
“மிகப் பெரிய உயிர்ப்பன்மையமான டைனோசர்கள் இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்தன, அவற்றின் முடிவும் இயற்கையாகவே நடந்தது. ஆனால் இயற்கையை வெல்ல வேண்டும் என்ற குறி்க்கோளுடன் வாழும் மனிதர்களின் வாழ்க்கைமுறை புவியின் அங்கங்களை பாதிக்கிறது. இது மனித நாகரீகத்தின் அழிவுக்கு விரைவாக வழி வகிக்கிறது” என்றார் தவ்வை
“பல லட்சம் ஆண்டுகளாக புவியில் இருந்த மனித இனம் எப்படி காணாமல் போகும்?”
“200000 ஆண்டுகளுக்கு முன் புவியில் தோன்றிய மனித இனம் காடுகளில் வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்தது. புவியின் நிலையான பருவநிலை மற்றும் புவியின் வளங்களின் மூலம் கடந்த 10000 ஆண்டுகளாக வேளாண்மை, கூட்டு சமூக வாழ்வு எனத் தொடங்கிய மனித இனம் எண்ணிக்கையில் அதிகரித்து புவியின் அனைத்து கண்டங்களிலும் பரவி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது” என்றார் தவ்வை
“மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த பேரழிவும் இல்லாமல் வாழ்ந்த கொண்டு இருந்தார்கள். கடந்த 500 ஆண்டுகளாக என்ன மாறிவிட்டது?” எனக் கேட்டார் கோதை
“1500 ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் பெரிய அளவில் தொடங்கிய கடல் வணிகமும், நாடு பிடித்தலும் புவியின் பல பகுதிகளில் இருந்த பெரும் காடுகளை, புல்வெளிகளை அழித்து, பழங்குடிகளை, விலங்குகளை காணாமல் போகச் செய்து இயற்கை வளங்களைச் சூறையாடின. இதன் மூலம் சேர்ந்த செல்வம் மேலும் புதிய படையெடுப்புகளுக்கும், வணிகத்துக்கும் பயன்படும் அறிவியலுக்குச் செலவிடப்பட்டன. இந்த நிலப் பயன்பாட்டு மாற்றம் பருவநிலையை நிரந்தரமாக மாற்றியது” என்றார் தவ்வை
“நிலப்பயன்பாட்டுக்கும் காலநிலைக்கும் என்ன தொடர்பு?” என்றாள் வானதி
“காடுகள் மற்றும் புல்வெளிகளை வேளாண்மை, மேய்ச்சல் நிலங்களாக மாற்றும் போது அங்குள்ள தாவரங்கள், விலங்குகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஒளிச்சேர்க்கை மூலம் மண்ணில் சேரும் கரிமத்தின் அளவு குறைந்து காற்றில் கரிம அளவு அதிகரிக்கிறது. இயற்கையான நிலப்பரப்பை அழித்து உருவாகும் பெரும் நகர அமைப்புகள் கருமையான சாலைகள், கட்டிடங்கள் மூலம் வெப்பத்தை உள்வாங்கி மெதுவாக வெளியிடுகின்றன. இதன் மூலமும் வெப்பம் அதிகரிக்கிறது” என்றார் தவ்வை
“நிலப்பயன்பாட்டு மாற்றம் தான் பெரும் பிரச்சினையா?” என்றாள் வானதி
“அது மட்டும் இல்லை, ஐரோப்பாவில் கப்பல் கட்டுவதற்கும், வணிகத் தேவைக்கும் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால் தேவையைச் சமாளிக்க சிறிய அளவில் இருந்த நிலக்கரி சுரங்கங்கள் பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த அதிக ஆற்றலை வைத்து பல்வேறு புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், 1712 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான் நீராவி இயந்திரம்” என்றார் தவ்வை
“இந்தக் காலகட்டம் தொழிற் புரட்சி தானே?” என்றார் கோதை
“ஆம். படிம எரிபொருள் எரிப்பால் இயங்கும் இயந்திரங்கள் பலர் செய்யும், பல வேலைகளை விரைவாகச் செய்தன. இவை மூலம் மேலும் பல புதிய இயந்திரங்கள் உருவாகின. வணிகமும், லாபமும் இயந்திரங்களால் பெருகியது. பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக அதுகரித்தது ஆனால் புவியின் இயல்பு பாதிக்கப்பட்டது” என்றார் தவ்வை
“பொருளாதார வளர்ச்சி நல்லது தானே?” என்றார் கோதை
“அதிக நிலக்கரி எரிப்பு மற்றும் காடழிப்பால் காற்றில் வெப்பத் தேக்க வாயுக்களின் அளவு தொழிற்புரட்சி காலத்தில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. 1900 ஆண்டு வாக்கில் கச்சா எண்ணெயின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், மேலும் பல புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன”
“மேலும் ஒரே இடத்தில் அதிகமாக வசிக்கும் மக்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வேதிப் உப்பை, இயந்திரங்களை ஆதாரமாகக் கொண்ட நவீன ஒற்றைப் பயிர் வேளாண்மை பெருகியது. இவற்றின் மூலம் வெப்பத்தேக்க வாயுக்களின் அளவு வேகமாகக் கூடியது. இதன் விளைவாக புவியின் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியது” என்றார் தவ்வை
“ஆனால் இதன் விளைவுகள் ஏன் உடனடியாக ஏன் மக்கள் உணரவில்லை?” என்றான் நந்தன்
“இதற்கு காரணம் நீர். கடல் நீர் அதிக அளவில் வெப்பத்தை உள்வாங்குவதால் வானிலையில், பருவங்களில் பெரும் மாற்றங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன் வரை பெரிய அளவில் இல்லை. தற்போது கடலின் வெப்பத்தை உள்வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்து விட்டதால் பருவங்களிலும், வானிலையிலும் தீவிர மாற்றங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன. இந்நிகழ்வுகள் மனித இன வளர்ச்சிக்குத் தேவையான நிலையான பருவநிலை மற்றும் உணவு உற்பத்தியை மிகப் பெரிய அளவில் பாதித்து, இயற்கையை இயந்திரங்களின் துணை கொண்டு வெல்ல நினைத்துக் கொண்டிருக்கும் மனித நாகரீகத்திற்கு பேரழிவாக உருவெடுத்துள்ளன” என்றார் தவ்வை
“பொருளாதாரத்திற்கும் காலநிலைப் பிறழ்விற்கும் என்ன தொடர்பு?” என்றார் கோதை
“நாளை ஊர்ச் சந்தையில் இதற்கான பதில் கிடைக்கும்” என்றார் தவ்வை
Leave a comment