22. வளம் குன்றாத வளர்ச்சி

மறுநாள் இரவு முழுமதி வெளிச்சத்தில் தவ்வைக்காக வீட்டிற்கு வெளியே உணவுடன் மூவரும் காத்திருந்தனர்.

சிறிது தூரத்தில தவ்வை வருவதைக் கண்ட நந்தன், தவ்வையை நோக்கி ஓடினான்.

அனைவரும் உணவருந்திய பின் உரையாடல் தொடங்கியது.

“வளம் குன்றாத வளர்ச்சி என்றால் என்ன?” என்றாள் வானதி

“வளமும் மனித இன வளர்ச்சியும் நேர் எதிரானவை. எளிதாகக் கிடைக்கும் புவியின் வளங்களைச் சிதைத்தே மனித இனம் வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சியின் கழிவுகளும் (கரியமில வாயு, நெகிழி, அணுக் கழிவு மற்றும் பல) முறையாக மறுசுழற்சி செய்யப்படவில்லை. எந்த வளத்தை மனித இனம் சிதைக்காமல் வளர முடியும்?” என்றார் தவ்வை

“வளம் குன்றா வளர்ச்சியின் அடிப்படை படிம எரிபொருள் ஆற்றல் உற்பத்தியை மாற்று புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களுக்கு மாற்றுவதே. இதன் மூலம் கரிம உமிழ்வை குறைக்கலாம் எனக் கூறுகிறார்கள்” என்றார் கோதை

“புதுப்பிக்கத் தக்க ஆற்றல் என்பதே இல்லை. மாற்று மின் ஆற்றல் ஆதாரங்கள் மட்டுமே சிறிய அளவில் உள்ளன. ஆற்றல் என்பதை பொதுவாக மின்சாரம் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் இரும்பு உருக்காலைகள், சிமென்ட் தொழிற்சாலைகள், பெரும் சுரங்கங்கள், வேளாண்மை (உரம் தயாரிப்பு, டிராக்டர் பயன்பாடு) போன்ற தொழில்கள் படிம எரிபொருள் எரிப்பை நம்பி உள்ளன. மேலும் மாற்று ஆற்றல் உற்பத்தி ஆதாரங்களின் பாகங்களை (சோலார் பேனல், டர்பைன், உதிரி பாகங்கள்) உற்பத்தி செய்வது படிம எரிபொருள் எரிப்பே” என்றார் தவ்வை

“மின்சக்தியால் இயங்கும் பல வாகனங்கள் உள்ளன, அவை பெரும் தீர்வு எனக் கூறுகிறார்களே?” என்றாள் வானதி

“போக்குவரத்து என்பது ஆற்றல் பயன்பாட்டில் ஒரு பகுதி மட்டுமே. மின்வாகனங்கள் இயங்க போதுமான அளவு மின்சாரத்தை மாற்று ஆற்றல் ஆதாரங்கள் உற்பத்தி செய்வதில்லை. வாகனங்களை உருவாக்க இரும்பு, நெகிழி, அலுமினியம், செம்பு போன்ற பல பொருட்கள் தேவை. வாகனங்களை உருவாக்கவும், மறைமுகமாக இயக்கவும் படிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன” என்றார் தவ்வை

“சூரிய ஒளி இல்லாத நேரங்களில், காற்று வீசாத காலத்தில் மாற்று ஆற்றலுக்கு என்ன செய்வது?” என்றாள் வானதி

“மின்சாரத்தை சேமிக்க மின்கலங்கள் உள்ளன. ஆற்றல் உற்பத்தி இல்லாத போது மின்கலங்களில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார் கோதை

“மின்கலங்களைத் தயாரிக்க ஈயம், செம்பு, லித்தியம், கோபால்ட், நிக்கல், காட்மியம், லித்தியம், அலுமினியம் போன்ற உலோகங்களும், நெகிழியும் தேவை. இவற்றின் உற்பத்தி படிம எரிபொருளை நம்பியே உள்ளது. மேலும் புவியில் அரிதாகவே கிடைக்கக் கூடிய இந்த உலோகங்களில் சில புவியின் மிக முக்கிய பகுதிகளான வெப்ப மண்டலக் காடுகளில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் காடுகளை அழித்து, அங்கு வாழும் சிறுவர்களை வைத்து இவற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மின்கலங்களை மறுசுழற்சி செய்யவும் முடியாது. இதனாலும் பெரும் சூழல் கேடு நடக்கிறது” என்றார் தவ்வை

“அணு உலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் கரிம எரிப்புக்கு ஒரு மாற்றாகுமே? ஒரு முறை இவற்றை நிர்மாணித்தால் பல காலத்துக்கு தடையில்லாத, கரிம உமிழ்வு இல்லாத மின்சாரம் கிடைக்கும்” என்றார் கோதை

“அணு உலைகளை நிர்மாணிக்க பெரிய நிலப்பரப்பும், கான்கிரீட், இரும்பு, ஈயம் மற்றும் பல மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான யுரேனியம், தோரியம், புளூட்டோனியம் போன்ற கன உலோகங்கள் உலகின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சுரங்கம் வெட்டுவதன் மூலம் பெறப்படுகின்றன. அபாயகரமான அணு உலைக் கழிவுகளை எப்படிக் கையாள்வது என இது வரை நவீன சமூகம் கண்டுபிடிக்கவில்லை. மலைக்குகைகளில், மண்ணுக்கடியில், ஆழக்கடலில் இவை ஈயப்பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆற்றலை வைத்து இரும்புத் தொழிற்சாலைகள், சிமென்ட் உற்பத்தி, வேளாண்மை போன்றவற்றை நடத்த முடியாது” என்றார் தவ்வை

“மின்சாரம் தவிர வேறு மாற்று ஆற்றல் உற்பத்தி எதுவும் இல்லையா?” என்றான் நந்தன்

“பெரும் மரங்களை வெட்டி, விறகாக்கி சிறு வில்லைகளை உருவாக்கிறார்கள். இந்த வில்லைகளை அனல் மின்நிலையங்களில் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்” என்றார் தவ்வை

“மரங்களை வெட்டி எரிப்பது எப்படி தீர்வாகும்?” என்றான் நந்தன்

“வெட்டிய ஒவ்வோரு மரத்திற்கும் பத்து மரக்கன்றுகளை நட்டுவிட்டதாக கணக்கு மட்டும் காட்டுகிறார்கள், ஆனால் அவை எங்கு நடப்பட்டன, அவை வளர்ந்துள்ளனவா என யாருக்கும் தெரியாது” என்றார் தவ்வை

“இதற்கு கரிமக் கடன் என்ற பெயரும் உள்ளதே?” என்றார் கோதை

“கரிமக் கடன் என்பது பெருநிறுவனங்கள் வெளியிடும் கரிமத்தை தடுக்கும் ஒரு முயற்சி. அரசு நிர்ணயித்துள்ள அளவை விட ஒரு நிறுவனத்தின் கரிம உமிழ்வு அதிகமாக இருந்தால் நிறுவனம் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும். நிறுவனத்தின் கரிம உமிழ்வு குறைவாக இருந்தால், கரிமக் கடன் அதன் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கரிமக் கடனை வேறு ஒரு நிறுவனத்திற்கு நல்ல விலைக்கு விற்கலாம்” என்றார் தவ்வை

“அப்படியானால் வருமானம் அதிகமாக இருக்கும் நிறுவனம் தனது கரிம உமிழ்வைக் குறைக்காமல் இருக்க மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்குமே? இதில் கரிம உமிழ்வு எங்கு குறைந்தது?” என்றாள் வானதி

“இவை மரம் நடுவது போல் நிறுவன செலவு கணக்கிலும், விளம்பரங்களில் மட்டுமே வரும். இது போன்ற திட்டங்களால் கரிம உமிழ்வு குறையாது” என்றார் தவ்வை

“அப்படியானால் வளர்ச்சி அதிகரிக்கும் போது வெப்பத்தேக்க வாயுக்களின் விகிதமும் அதிகரிக்கும் அல்லவா?” என்றார் கோதை

“எப்போதெல்லாம் உலகின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதோ அப்போதெல்லாம் கரிம உமிழ்வு அதிகரித்தே உள்ளது. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்றார் தவ்வை

“பல நாடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகையே கரிம உமிழ்வை அதிகரிக்கிறது. மக்கள் தொகை குறைந்தால் கரிம உமிழ்வும் குறையும்” என்றார் கோதை

“மக்கள் தொகை விகிதம் விரைவாகக் குறைவதே பெரும் பிரச்சினை. நாளை இதைப் பற்றி உரையாட எங்கு சந்திக்கலாம்?” என்றார் தவ்வை

“உங்கள் வீட்டில் சந்திக்கலாம்” என்றான் நந்தன்

“இது வரை நாம் சந்தித்த அனைத்து இடங்களும் எனது உறைவிடமே. நாளை அருகில் உள்ள சிறுநகரத்தின் நுழைவு வாயிலில் சந்திப்போம்” எனக் கூறி விடை பெற்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started