மறுநாள் ஊர் சந்தையில் தவ்வையைக் கண்டனர் மூவரும். அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியில்
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துண்ர்வும்” எனப் பாடிக் கொண்டிருந்தார் தவ்வை
“இந்தப் பாடலின் பொருள் என்ன?” என்றார் கோதை
“கடல் வழியாக வரப்பெற்ற குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து வந்த வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற அகில் சந்தனம் தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள் போன்றவற்றின் வணிகம் புகார் துறைமுகத்தில் நடந்தது என விளக்குகிறது இப்பாடல்” என்றார் தவ்வை
“பழங்காலத்திலும் காடுகளை அழித்தும், மலைகளை உடைத்தும், பெரு நிலத்தில் வேளாண்மை செய்தும் வணிகம் நடந்துள்ளதே. அப்போது ஏன் காலநிலை மாறவில்லை?” என்றார் கோதை
“500 ஆண்டுகள் முன்பு வரை மனிதர்களிடம் அவர்களது உடல் உழைப்பு, வளர்ப்பு விலங்குகளின் உழைப்பு தவிர வேறு எந்த ஆற்றலும் இல்லை. இதன் மூலம் இயற்கை வளங்களை சிறிய அளவில் மட்டுமே அழிக்க முடிந்தது. சில இழந்த இயற்கை வளங்களை புவி மீண்டும் உருவாக்கிக் கொண்டது, சில அழிவுகளைத் தாங்கிக் கொண்டது. ஆனால் படிம எரிபொருள் ஆற்றலும், இயந்திரங்களும் மிகக் குறுகிய காலத்தில் இயற்கை வளங்களை பெரிய அளவில் அழித்து மிக அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. பொருட்களின் உற்பத்திக் கழிவு, காலாவதியான பொருட்களின் கழிவு போன்றவை காற்று, நீர், மண் என அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் புவியின் மீள் உருவாக்கத் திறன் குறைகிறது” என்றார் தவ்வை
“படிம எரிபொருள் ஆற்றல் பொருளாதாரத்திற்கு எவ்வாறு உதவுகிறது?” என்றாள் வானதி
“பொருளாதாரத்திற்கு பொருட்களை உருவாக்க மூலப்பொருள் மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. பொருட்களை விநியோகம் செய்ய ஆற்றல் தேவைப்படுகிறது. இதுவே பொருளாதாரத்தின் அடிப்படை. பொருளாதாரம் வளர அதிக அளவில் ஆற்றல் தொடர்ந்து தேவைப்படுகிறது. இதை எளிதாக சாத்தியப்படுத்துவது நிலக்கரி, கச்சா எண்ணை, இயற்கை எரிவாயு போன்ற படிம எரிபொருட்களே. எனவே இவற்றை தோண்டி எடுப்பதும், எரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது” என்றார் தவ்வை.
“கச்சா எண்ணை துரப்பும் இடங்கள் பாலைவன நாடுகளில் தானே அதிகமாக உள்ளன?” என்றார் கோதை
“கச்சா எண்ணை மிக எளிதாகக் கிடைக்கும் இடங்களே அவை. நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்கவும், அதிக அளவில் கச்சா எண்ணையை பல காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. மேலும் மின் சாதனங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் (இரும்பு, செம்பு, நிக்கல், கோபால்ட், காட்மியம், தங்கம், வெள்ளி) எடுக்கவும் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன” என்றார் தவ்வை
“எதற்காக மிக அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது?” என்றான் நந்தன்
“நாம் நாள்தோறும் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த சந்தையைப் பாருங்கள். சந்தைக்கான கட்டுமானம் உருவாக (சிமென்ட், மணல், கல், நீர், இரும்பு போன்ற பல பொருட்கள்) ஆற்றல் தேவை. சந்தையை தொடர்ந்து நடத்த மின்சாரம் தேவை. நுகர்வோர், வணிகர், பொருட்கள் வந்து போக போக்குவரத்திற்கான ஆற்றல் தேவை. இப்படி 24 மணி நேரமும் மனித சமூகம் ஆற்றலை நம்பியே இயங்குகிறது. இந்த ஆற்றலை தடையின்றி கொடுப்பது படிம எரிபொருட்களின் எரிப்பே” என்றார் தவ்வை
“உணவு உற்பத்திக்கும் காலநிலைப் பிறழ்விற்கும் என்ன தொடர்பு?” என்றான் நந்தன்
“அதிக அளவில் உணவு தயாரிக்க தொடர்ந்து காடுகளும், புல்வெளிகளும் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. நவீன வேளாண்மைக்குத் தேவையான வேதி உப்பு மற்றும் உயிர்க்கொல்லி உற்பத்தி படிம எரிபொருட்களை சார்ந்தே உள்ளது” என்றார் தவ்வை
“இவற்றின் உற்பத்தியில் வெளியாகும் கரிமத்தை வேளாண் நிலங்களில் வளரும் செடிகள் உள்வாங்குமே?” என்றாள் வானதி
“வேதி உப்பை வேளாண் நிலத்தில் கொட்டும் போது கரியமில வாயுவை விட தீவிரமான நைட்ரஸ் ஆக்சைடு எனும் வெப்பத்தேக்க வாயு உருவாகிறது. வேளாண் நிலத்தில் கொட்டப்படும் பல்வேறு வேதிப் பொருட்கள் பாசன நீரில் கலந்து பல நீர்நிலைகளை அடைந்து இறுதியாக கடலை அடைகின்றன. இவை போகும் இடங்களில் உயிர் வாழ முடியாத சூழலை ஏற்படுத்துகின்றன” என்றார் தவ்வை
“ஆற்றல் உற்பத்தியில் அதிக அளவு வெப்பத்தேக்க வாயுக்கள் உருவாகின்றனவா?” என்றான் நந்தன்
“எப்பொருளை எரித்தாலும் அதில் இருந்து கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைடு வெளியாகும். நிலக்கரி மற்றும் கச்சா எண்ணை எடுக்கும் போது மீதேன் வெளியாகிறது. நெகிழி உற்பத்தியும், நெகிழிக் கழிவும் மீதேன், கரியமில வாயுவை வெளியிடுகிறது. 70% வெப்பத்தேக்க வாயுக்கள் மனித சமூகம் ஆற்றலுக்காக படிம எரிபொருளை எரிப்பதின் மூலமே உருவாகின்றன” என்றார் தவ்வை
“காலநிலைப் பிறழ்வுக்கு அனைத்தையும் மின்மயமாக்கி, வளம் குன்றாத வளர்ச்சியை எட்டுவதே தீர்வு என்கிறார்களே?” என்றார் கோதை
“நாளை இரவு உங்கள் வீட்டருகில் சந்திக்கும் போது இதற்கான விடை கிடைக்கும்” என்றார் தவ்வை
Leave a comment