நந்தனும், வானதியும் எவ்வளவு யோசித்தும் அது என்ன பூ என இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்துடன் தவ்வையின் முகத்தை நோக்கினர்.
தவ்வை சுற்றி இருக்கும் மரங்களில் ஒன்றை காட்டி “இவற்றில் ஒன்று தான் அது” எனக் கூறினார். வேகமாக மரங்களைச் சுற்றி ஓடி ஒரு அத்தி மரத்தின் அடியில் வந்து நின்றனர். “இதோ காணாமல் பூ பூக்கும் மரம்” எனக் கூவினர்.
“நன்று. அத்தி மரம் வழக்கமான மரங்களைப் போல் பூ வைப்பதில்லை.சரி வாருங்கள் இப்போது புவி எவ்வாறு இயங்குகிறது? என்பதைப் பற்றி பேசலாம்.உங்களுக்கு தெரிந்ததைக் கூறுங்கள்” என்றார் தவ்வை
“புவி தனது அச்சில் சுழன்று, சூரியனையும் சுற்றி வருகிறது. புவியின் இந்த சுழற்சியால் தான் இரவும், பகலும் உருவாகிறது.புவியில் உயிர்கள் வாழ்வதற்கு இந்த சூரிய ஒளி இன்றியமையாதது. புவி சூரியனைச் சுற்றி வருவதால் பின்பனி,முன்பனி,இளவேனில்,முதுவேனில்,கார்,கூதிர் என பருவங்களும் மாறுவதாக படித்திருக்கிறேன்.இதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா .” என்றான் நந்தன்.
“பருவங்களை பற்றி பிறகு சொல்கிறேன்.இப்போது பூமியை பற்றி சொல்லுங்கள்”
“அண்டவெளியில் இருக்கும் மற்ற கோள்களும் சூரிய ஒளியைப் பெறுகின்றனவே. அவற்றில் ஏன் உயிர்கள் இல்லை?” எனக் கேட்டாள் வானதி.
“புவி தொடர்ந்து இயங்க சூரிய ஒளி இன்றியமையாதது. அது போலவே புவியின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வெப்பம், காற்று, நீர், நிலம் என்பனவாகும். இவையே புவியில் உயிர்கள் இயங்கக் காரணமாக இருக்கின்றன. அண்டவெளியில் இருக்கும் பல கோடி கோள்களில் புவியில் மட்டுமே உயிர் உள்ளது. இதற்கு காரணம் நீர். நீர் இல்லையென்றால் உயிர் உருவாகாது.”
“உயிர்கள் வாழ நீர் மட்டுமே போதுமா? சுவாசிப்பதற்கு காற்று, மற்றும் உண்ண உணவும் தேவையல்லவா?” எனக் கேட்டான் நந்தன்
“அவை அனைத்தும் தேவை தான். உயிர் வாழத் தகுதியான புவி இடமாக இருப்பதற்கு முதல் காரணம் நீர். புவி 70% சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது. நமது உடலும் 60% சதவிகிதம் நீரால் ஆனதே. மிகச்சிறு பாக்டீரியாவில் இருந்து மிகப்பெரிய நீலத் திமிங்கலம் வரை உள்ள அனைத்து உயிரினங்களும் நீரால் ஆனவையே”
“வெப்பம், ஒளி, நிலம், காற்று இல்லாமல் உயிர்கள் வாழ முடியுமா?” என்றாள் வானதி
“புவியின் மற்ற அங்கங்களான வெப்பம், ஒளி, காற்று, நிலம் ஆகியவை நீருடன் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. இந்த இணைப்பு தான் புவியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதனால் தான் புவியில் உயிர்கள் வாழ்கின்றன. இதைத் தான் பாடலாகப் பாடிக் கொண்டிருந்தேன்.” என்றார் தவ்வை.
“சிறு பாடலுக்குள் இவ்வளவு விசயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதா? புவி எப்படி உயிர் வாழத் தகுதியான இடமாக இருக்கிறது என விரிவாகக் கூற முடியுமா?” என இருவரும் கேட்டனர்.
“நீங்கள் இருவரும் நீண்ட நேரம் நடந்ததால் களைத்து விட்டீர்கள். என் கேள்விக்கு நீங்கள் பதில் கூறினால் நாளை கண்டிப்பாக விளக்குகிறேன்” எனக் கூறினார் தவ்வை
“என்ன கேள்வி, விரைவாகக் கூறுங்கள்” என ஆர்வத்துடன் கேட்டனர் இருவரும்.
“எள்ளை விட சிறிய இலை உள்ள மரம் என்ன மரம் ?,அந்த மரத்தில் ஒவ்வொரு பூவும் இரு வண்ணங்களை கொண்டிருக்கும். கண்டறிந்து வாருங்கள். நாளை ஓடைக் கரையில் இருக்கும் மருத மரத்தடியில் சந்திப்போம்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார் தவ்வை.
Leave a comment