19. உணவும் உடல்நலமும்

அனைவரும் மதிய உணவை உண்டுவிட்டு காட்டாற்று வெள்ளம் எப்போது வடியும் எனக் காத்துக் கொண்டிருந்தனர்.

“உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?” எனக் கேட்டான் நந்தன்

“அனைத்து மக்களுக்கும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான உணவு கிடைப்பதே உணவுப் பாதுகாப்பு. இது காலநிலைப் பிறழ்வின் விளைவுகளான கடும் வறட்சி, அதீத மழைப் பொழிவு, வெள்ளம், பருவம் தவறிய வானிலை, கடும் வெப்பம் போன்றவற்றால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதில் கடும் வெப்பம் பெரும் பங்கு வகிக்கிறது” என்றார் தவ்வை

“ஏன் வெப்பத்தின் பங்கு அதிகம்?” என்றான் நந்தன்

“ஒவ்வொரு உயிரும் வாழ, இனப்பெருக்கம் செய்ய. உகந்த வெப்பநிலை இன்றியமையாதது. குறைந்த காலத்தில், விரைவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது உயிரினங்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதனால் தாவரங்களின் விதை உற்பத்தி, விதையின் தரம் குறைந்து உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படுகிறது” என்றார் தவ்வை

“சில வருடங்களுக்கு முன் வெப்ப அலையால் கோதுமை உற்பத்தி குறைந்தது எனச் செய்திகளில் படித்தேன்” என்றார் கோதை.

“ஆம், உணவு தட்டுப்பாடு தவிர காலநிலைப் பிறழ்வால் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது, உடல் நலமும் பாதிப்படைகிறது. கடும் வறட்சியால் ஆறுகளும், நீர்நிலைகளும் வறண்டு போவதால் குடிக்கவும், வேளாண்மைக்கும் உலகின் பல இடங்களில் பெரும் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றார் தவ்வை

“கடும் வெப்பம் எப்படி உடல்நலத்தைப் பாதிக்கிறது?” என்றான் நந்தன்

“மனிதர்கள் புவியின் விதிகளுக்கு உட்பட்டவர்களே. மனித உடலின் மேற்புற வெப்பம் 35°C ஆகும். சுற்றுப்புற வெப்பம் இதை விடக் குறைவாக இருக்கும்போது உடல் தோல் வழியாக காற்றுக்கு எளிதாகக் கடத்துகிறது. சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்ப பரிமாற்றம் குறைகிறது” என்றார் தவ்வை

“ஆனால் பல இடங்களில் இதை விட அதிக வெப்பம் உள்ளதே?” என்றார் கோதை

“வெப்பம் என்றாலே நமக்கு பகலில் சில மணி நேரம் இருக்கும் அதீத வெப்பம் தான் நினைவுக்கு வருகிறது. இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்கும் போது நமது உறக்கத்தில் உடலின் உள்உறுப்புகள் வெப்பத்தை தோல் வழியாக வெளியேற்றும். இரவு நேர வெப்பம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் எளிதாக வெளியேற முடியாமல் உடல்நலம் கெடும். சில நேரங்களில் பகலில் விரைவாக அதிகரிக்கும் வெப்பம் மரணத்தில் முடியும். அதே போல் அதீத மழைப்பொழிவும் உடல்நலத்தைக் கெடுக்கும்” என்றார் தவ்வை

“ஆறுகளில் ஓடி கடலில் கலக்கும் மழை நீர் எப்படி உடல்நலத்தைப் பாதிக்கிறது?” என்றாள் வானதி

“காடழிப்பாலும், அதீத மழைப்பொழிவாலும், அதிகரிக்கும் வெப்பத்தாலும் பல நுண்ணுயிர்கள் மற்றும் கொசு போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகளவில் உருவாக உதவி புரிகின்றன. இதனால் நோய்கள் பரவுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன” என்றார் தவ்வை

“எதற்காக காடுகளை அழிக்கிறார்கள்? வெப்பத்தேக்க வாயுக்களை வெளியிடும் படிம எரிபொருள் ஆற்றல் ஏன் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது?” என்றார் கோதை

“இவை இரண்டும் உணவு உற்பத்திக்கும், பொருளாதாரத்திற்கும் அடிப்படை. இவற்றின் பயன்பாடு கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது”. என்றார் தவ்வை

“300 ஆண்டுகளுக்கு முன்பு படிம எரிபொருள் எரிப்பு இல்லையா?” என்றான் நந்தன்

“300 ஆண்டுகளுக்கு முன் நிலக்கரி எரிப்பு மிகச் சிறிய அளவில் மட்டுமே நடந்தது. மிகப் பெரிய அளவில் காடுகளை அழித்து உணவு உற்பத்தி நடக்கவில்லை. இவை இரண்டும் மனித இனத்தின் அதீத வளர்ச்சிக்குக் காரணம். நாளை இதைக் குறித்து உரையாடுவோம் மலையிடுக்கில் உள்ள பள்ளத்தாக்கில் உரையாடுவோம்” என்றார் தவ்வை

மழை நின்று, குகைக்கு வெளியே வெள்ளம் வடிந்து விட்டிருந்தது. காட்டாற்றில் வெள்ளம் இரைச்சலுடன் சென்று கொண்டிருந்தது. கோதை, வானதி, நந்தன் மூவரும் வீட்டை நோக்கி கிளம்பினர்.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started