அடுத்த நாள் காலையில் கடும் வெயில் அடிக்கத் தொடங்கி இருந்தது. காற்றின் புழுக்கம் அதிகரித்து இருந்தது. மதிய உணவாக மாங்காயில் இருந்து செய்யப்பட்ட புளிக் குழம்பு, நெல்லரிசிச் சோறு, மோர் போன்றவற்றை மதிய உணவுக்காக எடுத்துக் கொண்டு கோதையும், வானதியும், நந்தனுடன் சேர்ந்து புதர்க்காட்டுக்கு கிளம்பினர்.
காட்டாற்றங்கரையில் இருந்து தொலைவில் இருந்த இலந்தை மரத்தடியில் தவ்வை அமர்ந்து “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்ற சிலப்பதிகாரப் பாடலை பாடிக் கொண்டிருந்தார். ஆற்று மணல் வெயிலில் கொதித்துக் கொண்டிருந்தது. கடும் வெப்பத்தால் மரங்கள் இலைகளை உதிர்த்துவிட்டு நின்றன.
அவர்களைப் பார்த்ததும் பாடலை நிறுத்தி விட்டு, “இந்த காட்டாற்றில் எப்போது நீர் ஓடும்?” எனக் கேட்டார் தவ்வை
“இங்கு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஆனால் சில வருடங்களாக ஆற்றில் முன்பனிக் காலத்தில் இருந்து நீர் வருவதில்லை. கார்காலத்தில் கடும் வெள்ளம் வருகிறது. இந்த மாற்றாத்தால் வளமாக இருந்த காடு இன்று வறண்டு புதர்க்காடாக இருக்கிறது” என்றார் கோதை
“இதைத் தான் நான் பாடிய பாடலும் விளக்குகிறது. இந்த இடத்தின் இயல்பான காலநிலை மாறியதால் காடு பாலை நிலமாக மாறிவிட்டது” என்றார் தவ்வை
“இந்த இடம் ஏன் பாலையாக மாறிவிட்டது?” என்றான் நந்தன்
“இந்தப் புதர்க்காட்டின் மேற்குப் பகுதியில் கடும் வெப்பத்தால் காய்ந்து கிடந்த மூங்கில் காட்டில் வெட்டிய மின்னல் மூலம் பரவிய காட்டுத் தீ மலையின் இப்பக்கம் இருக்கும் காட்டை முற்றிலும் எரித்து விட்டது. சில நாள் கழித்து தீவிர மழைப்பொழிவு நடந்து, தாவரங்கள் இல்லாத இடத்தில் மழைநீர் மேல் மண்ணை அரித்துச் சென்றுவிட்டது. பிறகு இங்கு மழைப்பொழிவும் குறைந்து விட்டது. மீண்டும் இங்கு காடுகள் உருவாகுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இந்த இடத்தின் இயல்பே மொத்தமாக மாறி, காலநிலையும் மாறிவிட்டது.” என்றார் தவ்வை
“காலநிலை இங்கும் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் மாறுகிறதே, இது ஏன் நடக்கிறது?’ என்றார் கோதை
“உலகின் காலநிலையைப் தீர்மானிப்பது புவியின் அங்கங்களான காற்று, நீர், நிலம், உறைபனி, வெப்பம், ஒளி போன்றைவையே. இவற்றில் வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதால் புவியின் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது” என்றார் தவ்வை
“இதன் விளைவுகள் என்ன?” என்றாள் வானதி
“நாம் வெப்பநிலை உயர்வதை உணர்கிறோம், கடும் வெள்ளம், அதீத மழைப்பொழிவு, கடும் பனி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளைக் காண்கிறோம். இதனால் பலர் ஆண்டுதோறும் வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்கின்றனர். சிலர் உயிரை இழக்கின்றனர். இவற்றைத் தவிர நாம் உணர முடியாத, நமக்குத் தெரியாத பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன” என்றார் தவ்வை
“நமக்குத் தெரியாத, எங்கோ நடக்கும் நிகழ்வுகளால் நமக்கு என்ன பாதிப்பு?” என்றாள் வானதி
“உலகின் அனைத்து இயற்கை நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. காற்றில் அதிகரிக்கும் வெப்பம் கடலை வெப்பமடைய வைக்கிறது. வெப்பமடைந்த கடல் நீரோட்டங்கள் துருவங்களில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகின்றன. இதனால் கடல் மட்டம் உலகின் பல பகுதிகளில் உயர்ந்து நம் நாட்டு கடலோரப் பகுதிகள் கடலுக்குள் செல்கின்றன. ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சில தீவுகள் கடல் மட்டம் உயர்வதால் கடலில் மூழ்கிவிட்டன. பல இந்தியக் கடலோரப் பகுதிகள் அதிகரிக்கும் கடல் அரிப்பால் பாதிக்கப்படுகின்றன” என்றார் தவ்வை
“நாம் கடலுக்கு அருகில் இல்லையே?” என்றான் நந்தன்
“அதீத மழைப்பொழிவால் ஏற்படும் கடும் வெள்ளமும், மழைப்பொழிவு குறைந்து நடக்கும் வறட்சியும் அனைத்து இடங்களையும் தொடர்ந்து பாதிக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அதிகம் உயிர்ப்பன்மையமும் உணவுப் பாதுகாப்பும் தான்” என்றார் தவ்வை
அப்போது மிக வேகமாக காற்று வீசத் தொடங்கியது, மின்னல், இடியுடன் கருத்த மேகக் கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின.
“விரைவில் கடும் மழை பெய்யும், நாம் அருகில் உள்ள குகைக்கு செல்வோம் வாருங்கள்” என்றார் தவ்வை
“இது மழைப் பருவம் இல்லையே” என்றார் கோதை
“காலநிலைப் பிறழ்வால் பருவங்களின் காலமும், இயல்பும் மாறிவிட்டது. மழையின் வருகை மற்றும் அளவை முன் கூட்டியே தீர்மானிப்பது கடினமாக உள்ளது ” எனப் பேசிக் கொண்டே அருகில் இருந்த சிறு குகையை அடைந்தார் தவ்வை
பெரும் இடியுடனும், மழையுடனும் தொடங்கிய கடும் மழை விடாமல் பெய்யத் தொடங்கியது.
“மழை இப்போதைக்கு நிற்காது, மதிய உணவை உண்ட பின் நாம் இங்கிருந்து செல்லலாம்” என்றார் கோதை
காட்டாற்று வெள்ளம் பெரும் இரைச்சலுடன் குகையின் வாயிலைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்த பெரும் வெள்ளம் பாறைகளையும், பல்வேறு மரங்களையும் அடித்துச் சென்று கொண்டிருந்தது.
Leave a comment