16. உயிர்ப்பன்மையம்

நந்தனும் வானதியும் மறுநாள் காலை தினை மாவை தேனுடன் சேர்த்து உண்ட பிறகு சோலைக்காட்டிற்கு கிளம்பினர்.

போகும் வழியில் இருந்த விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகளின் வகைகளை குறித்துக் கொண்டே சென்றனர்.

பல விதமான பறவைகளின் ஒலி, பூச்சிகளின் ரீங்காரம், பல விலங்களின் ஒலி, சலசலவென்று ஓடும் ஓடை என அனைத்தையும் கேட்டுக்கொண்டே ஓடைக்கரையில் நடந்தனர்.

சோலைக்காட்டின் மத்தியில் இருந்த பெரிய மரத்தடியில் அமர்ந்திருந்த தவ்வை “மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” எனப் பாடத் தொடங்கினார் தவ்வை

“இப்பாடலின் பொருள் என்ன?” என்றான் நந்தன்

“தொல்காப்பியர் நிலத்தின் வகைகளை அவற்றின் இயல்பை, புவியியலைப் பொறுத்து நான்கு திணைகளாகப் பிரித்துக் கூறுகிறார்” என்றார் தவ்வை

“திணைகள் என்றால் என்ன?” என்றாள் வானதி

“திணை என்பது சுற்றுச் சூழல் அமைப்பு (ecosystem) என பொருள்படும். ஒவ்வொரு திணையிலும் பல்வேறு உயிரினங்கள் இருக்கும். குறிஞ்சிப் பூவை உடைய, புலிகளும், மயிலும் உலாவும் மலையும், மலை சார்ந்த இடங்கள் குறிஞ்சித் திணை. முல்லைப் பூவை உடைய ஆநிரை நிறைந்த, முயல்கள் ஓடும் காடும், காடு சார்ந்த இடமும் முல்லைத் திணை. மருத மரத்தின் பூக்களை உடைய, எருமைகளும், நாரைகளும் நிறைந்த வயலும், வயல் சார்ந்த இடமும் மருதத் திணை. நெய்தல் (நீல ஆம்பல்) பூக்களை உடைய, புன்னை மரங்கள், கடற்காகம் நிறைந்த கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணை ஆகும்” என்றார் தவ்வை

“ஒவ்வொரு திணைக்கும் உயிரனங்களின் வகை மாறுபடுகிறதே?” என்றாள் வானதி

“ஒரு திணையில் உள்ள உயிரினங்களின் தொகுப்பே அந்தத் திணைக்கான உயிர்ப்பன்மையம் (biodiversity) ஆகும். ஒரு உயிர்ப்ன்மையத்தில் வாழும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன, முடிந்தால் தமக்கான காலநிலையை தீர்மானிக்கின்றன” என்றார் தவ்வை

“உயிர்கள் எப்படி காலநிலையைக் கட்டுப்படுத்த முடியும்?” எனக் கேட்டாள் வானதி

“உயிர்களின் வாழ்க்கை புவியின் கரிமச் சுழற்சியில் ஒரு அங்கம். பெரும் காடுகளும், கடலில் வாழும் உயிரினங்களும் காற்றில் உள்ள கரிமத்தை உணவாக மாற்றுகின்றன. இறுதியில் கரிமம் மண்ணில் சேர்கிறது. சில கடல் வாழ் உயிரினங்கள் கழிவாக வெளியிடும் கந்தக சார்ந்த (dimethyl sulphide) மூலக்கூறுகள் மேகங்கள் உருவாகத் தேவையான கருப்பொருளாக அமைகின்றன” என்றார் தவ்வை

“கடலிலும் உயிர்ப்பன்மையம் உள்ளதா?” என்றான் நந்தன்

“நிலத்தில் இருப்பதை விட கடலில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகம், அவற்றின் உயிர்ப்பன்முகத்தன்மையும் மிக அதிகம். கண்ணுக்குத் தெரியாத நுண் மிதவைப் பாசி முதல் உலகின் மிகப் பெரிய விலங்கினமான நீலத் திமிங்கலம் வரை கடலில் உள்ளன. உயிர்களுக்கு உயிர்வளியை உணவை உருவாக்கும் நுண் மிதவைப் பாசிக்கு தேவையான ஊட்டச் சத்து மற்ற உயிரினங்களின் கழிவில் இருந்து கிடைக்கிறது” என்றார் தவ்வை

“இதுவும் கரிமச் சுழற்சி தானே?” என்றான் நந்தன்

“ஆம், கடல் நீர் அதிகமான அளவில் காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்குகிறது. கடல் நீரில் கலந்துள்ள கரியமில வாயுவை பல உயிரினங்கள் உள்வாங்கி கால்சியம் அயனியுடன் சேர்த்து சுண்ணாம்பால் (calcium carbonate) ஆன கூடுகளை உருவாக்குகின்றன. உயிரினங்கள் இறக்கும் போது, சுண்ணாம்பு கடலின் தரைத்தளத்தை அடைகிறது. இதன் மூலமும் புவியின் கரிம சுழற்சியை கடல் கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் புவியில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது” என்றார் தவ்வை

“இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் புவியின் வெப்பம் ஏன் அதிகரிக்கிறது?” என்றாள் வானதி

“உயிர்களின் எண்ணிக்கை உயிர்களின் வாழ்விட அழிப்பாலும் ( காடழிப்பு, அதிகரிக்கும் ஒற்றைப் பயிர் வேளாண்மை) புவியில் கலக்கும் பல்வேறு நச்சுக்களாலும் வேகமாகக் குறைகிறது. இதனால் உயிர்ப்பன்மையம் குறைந்து புவியின் கரிம சுழற்சி பாதிக்கப்படுகிறது” என்றார் தவ்வை

“கரிம சுழற்சிக்கும் வெப்பத்திற்கும் என்ன தொடர்பு?” என்றாள் வானதி

“அதற்கான விடையை நாளை காண்போம்” என்றார் தவ்வை

“உங்களிடம் உரையாட எங்கள் தாயும் விருப்பம் தெரிவித்துள்ளார் அவரை அழைத்து வரலாமா?” என்றாள் வானதி

“தாராளமாக அழைத்து வாருங்கள்” என்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started