14. காடுகள்

நந்தனும் வானதியும்  தவ்வை கூறியபடியே  ஊரில் இருந்த கோவில் காடுகளைச் சுற்றிப் பார்க்க கிளம்பினர். அங்கிருந்த பல்வேறு மரங்களை பார்த்துவிட்டு ஓடைக்கரை வழியாக சோலைக்காட்டிற்கு முன்பு இருந்த ஒரு காட்டை அடைந்தனர்.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்” என்ற குறளை பெரிய பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவ்வை பாடிக் கொண்டிருந்தார்

“இந்தத் திருக்குறளின் பொருள் என்ன?” என்றாள் வானதி

“தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும்,
குளிர்ந்த நிழலையுடைய காடும்,  ஆகியவை ஒரு நாட்டுக்கு அரண் ஆகும் என்பதே இதன் பொருள்” என்றார் தவ்வை

“நாம் சென்ற புதர்க்காட்டில் நிழல் இல்லையே” என்றான் நந்தன்

“காடுகளின் இயல்பு இடம், பருவங்கள், மழைப்பொழிவு, வெப்பம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு மாறும். நீங்கள் பார்த்த காடுகளை பற்றிக் கூறுங்கள்” என்றார் தவ்வை

“கோயில் காடுகளில் பெரும் மரங்கள் இருந்தன, பல்வேறு பறவைகள் இருந்தன. புதர்க்காட்டில் மரங்கள் குறைவாக இருந்தன, பறவைகளும், சிறு விலங்குகளும் அதிகமாக இருந்தன”  என்றான் நந்தன்

“ஓடைக்கரையை ஒட்டிய காட்டில் மிகப் பெரிய மரங்களும், பெரு விலங்குகளும், அதிக அளவில் பறவைகளும் இருந்தன” என்றாள் வானதி

“பல வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் இருந்தன. தோப்பில் இருப்பது போல் ஒரே மர வகை எங்கும் இல்லை” என்றான் நந்தன்

“இது போலவே புவியின் மேற்பரப்பு முழுதும் பல்வேறு வகையாக காடுகளும், புல்வெளிகளும் உள்ளன. இவற்றை நம்பியே மற்ற உயிரினங்களும், மனிதர்களும் உள்ளனர். மேலும் புவியின் காலநிலையை சீராகப் பராமரிப்பதிலும் காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன” என்றார் தவ்வை

“மனிதர்கள் எப்படி காடுகளை சார்ந்துள்ளனர்?” என்றாள் வானதி

“காடுகளும், புல்வெளிகளும் நிலவாழ் உயிர்களுக்கு உயிர்வளியை உற்பத்தி செய்கின்றன. காடுகள் இல்லையென்றால் ஆறுகள் கோடையில் வறண்டு விடும், மழைக்காலத்தில் ஆறுகளில் கடும் வெள்ளம் போகும்” என்றார் தவ்வை

“காட்டுக்கும் ஆறுக்கும் என்ன தொடர்பு?” என்றான் நந்தன்

“அதிவேகமாக நிலத்தை நோக்கி விழும் மழைத்துளிகள் மரங்களின் இலைகளில் விழுந்து, நீர் மெதுவாக கீழே வருகிறது. மரங்கள், செடிகளின் வேர்கள் நீர் வேகமாக ஓடுவதை தடுக்கின்றன. இதனால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, மழை பெய்த பல நாட்களுக்குப் பிறகும் ஆற்றில் நீர் ஓடுகிறது” என்றார் தவ்வை

“சீரான காலநிலையை நம்பி உள்ள காடுகள் எப்படி காலநிலையைப் பராமரிக்க முடியும்?” என்றான் நந்தன்.

“புவியின் கரிம சுழற்சியில் காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. காடுகள் காற்றில் இருக்கும் கரிமத்தை ஒளிச்சேர்க்கை மூலம் மண்ணில் சேர்ப்பதால் வளிமண்டலத்தில்  கரியமில வாயுவின் அளவு சீராகப் பராமரிக்கப்படுகிறது. இதனால் புவியின் காலநிலையும் சீராக இருக்கிறது. சூரிய ஒளி தரையில் விழுவதை மரங்கள் தடுப்பதால் தரை குளிர்ச்சியாகி, சுற்றுப்புற வெப்பம் குறைகிறது” என்றார் தவ்வை

“மரம் நட்டால் மழை வருமா?” என்றான் நந்தன்

“ஆங்காங்கே மரம் நடுவது காட்டை உருவாக்காது. மிகப் பெரிய அடர்ந்த சோலைக் காடுகள் கோடைக் காலங்களில் தனக்கான மழையை உருவாக்குகின்றன, பருவகால மழைப் பொழிவை அதிகரிக்கின்றன” என்றார் தவ்வை

“காடுகளை விட புல்வெளிகளின் முக்கியத்துவம் குறைவா?” என்றாள் வானதி

“காடுகள் என்றாலே நிலத்தில் மனிதர்கள் உருவாக்காத உயிர்ப்பன்மையம் நிறைந்த இயற்கைச் சூழல் தான். பாலைவனத்தின் நடுவில்  இருக்கும் பாலைவனச் சோலை, மிதக்குளிர் பகுதிகளில் இருக்கும் பெரும் புல்வெளிகள், வட துருவத்தின் அருகில் இருக்கும் ஊசியிலைக் காடுகள், வெப்பமண்டலத்தின் மழைக்காடுகள், வறண்ட நிலத்தின் வறல் புல்வெளிகள், புதர்க்காடுகள் என அனைத்துமே காடுகள் தான். அவை அனைத்தும் புவியின் கரிம சுழற்சியில் ஒரு அங்கம்” என்றார் தவ்வை

“கரிமசுழற்சி என்றால் என்ன?” என்றான் நந்தன்

“கரிம சுழற்சி என்பது நமது உணவு உற்பத்தியும், அதன் பின் நடக்கும் கழிவு சுழற்சியுமே. நான் நாளை இதை விளக்குகிறேன். நாளை சந்திப்புக்கு  நீங்களே ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள், ” என்றார் தவ்வை

“நாளை நாம் ஆற்றின் நடுவே உள்ள தீவில் சந்திக்கலாம். அங்கு நிறையப் பறவைகளும், விலங்குகளும் உள்ளன” என்றான் நந்தன்

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started