கடல் நீரோட்டத்திற்கும். கிணற்றுக்கும் என்ன தொடர்பு என பேசிக் கொண்டே இருவரும் உறங்கச் சென்றனர்.
அடுத்த நாள் நண்பகல் உணவாக பிரண்டைத் துவையலையும், கம்மங்கூழையும் குடித்த பின் வயலுக்கு அருகில் இருக்கும் பெரிய கிணற்றுக்குச் சென்றனர்.
சிறார்களைப் பார்த்ததும் கிணற்றுக்குள் ஓரிடத்தில் மெதுவாக இறங்கி, நீரின் தன்மையை அறியச் சொன்னார்
“இங்கு நீர் வெப்பாக இருக்கிறது” என்றான் நடுக்கிணற்றில் இருந்த நந்தன். கிணற்றின் ஓரத்திற்கு நீந்திச் சென்ற வானதி நீர் அங்கு குளுமையாக இருப்பதை உணர்ந்தாள்.
“ஏன் ஒரு கிணற்றில் இருக்கும் நீர் ஏன் ஓரிடத்தில் குளுமையாகவும், இன்னொரு இடத்தில் வெப்பமாகவும் இருக்கிறது?” எனக் கேட்டார் தவ்வை
“சூரிய ஒளி விழும் இடங்கள், அதிக ஆழமில்லாத இடங்கள் வெப்பமாகவும், நிழலில் இருக்கும் கிணற்றின் ஓரம் மற்றும் ஆழமான இடங்களில் குளுமையாக உள்ளன” என்றாள் வானதி
“மிகப் பெரிய பரப்பைளவை உடைய கடலின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளி மிகக் குறைவாக விழுவதால் அங்கு குளிர்ச்சி அதிகம். அதிகப் பரப்பளவை உடைய மத்திய ரேகை கடல் பகுதியில் அதிக சூரிய ஒளி விழுவதால் அங்கு வெப்பம் அதிகம். இந்த வெப்ப வேறுபாடு கடல் நீரை நகர்த்துகிறது. இப்படி தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் கடல் நீர் கடல் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்ற” என்றார் தவ்வை
“வெப்ப வேறுபாடு எப்படி நீரை நகர்த்தும்?” என்றான் நந்தன்
“வெப்பத்தை உள்வாங்கிய கடல் நீர் விரிவடைந்து, அதன் அடர்த்தியும் குறைகிறது. இந்த எடை குறைந்த வெப்ப நீர் துருவங்களை நோக்கிப் பயணிக்கிறது. துருவங்களை அடையும் போது நீர் குளிர்ந்து மூழ்குகிறது” என்றார் தவ்வை
“நீர் எப்படி நீருக்குள் மூழ்கும்?” என்றாள் வானதி
“வெப்பமான நீர் குளிர் மிகுந்த துருவங்களை அடையும் போது வெப்பத்தை நீராவி போக்கு மூலம் வெளியிடுகிறது. இதனால் நீரின் அடர்த்தியும், நீரில் உள்ள உப்பின் அளவும் அதிகரிக்கிறது. உப்பின் அளவு நீரில் அதிகரிக்கும் போது நீரின் எடை கூடி, உப்பு மிகுந்த கடல் நீர் கடலின் ஆழப் பகுதிக்குச் செல்கிறது.” என்றார் தவ்வை
“ஆழத்துக்குச் சென்ற நீர் எப்படி மீண்டும் நகரும்?” என்றான் நந்தன்
“துருவங்களில் மூழ்கிய நீரால் கடல் மட்டத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. இதை நிரப்ப வெப்பமான நீர் மத்திய ரேகைப் பகுதிகளில் இருந்து வருகிறது. கடல் நீர் மத்திய ரேகைப் பகுதியின் மேல்மட்டத்தில் இருந்து நகர்வதால் அந்த வெற்றிடத்தை நிரப்ப துருவங்களில் மூழ்கிய நீர் மத்திய ரேகைக்கு வருகிறது” என்றார் தவ்வை
“கடல் நீர் தொடர்ந்து பயணிப்பதால் என்ன பயன்?” என்றாள் வானதி
“கடல் மேல் மட்டத்தில் பயணிக்கும் நீர் மத்திய ரேகைப் பகுதிகளில் சேரும் வெப்பத்தை குளிரந்த துருவங்களுக்கு கடத்துகின்றன. இதனால் புவியின் மத்தியப் பகுதி அதிக வெப்பமடைவதில்லை, துருவங்களும் அதிகமாக குளிர்வடைவதில்லை. இதனால் இரு பகுதிகளிலும் உயிர் வாழத் தகுந்த சூழல் நிலவுகிறது” என்றார் தவ்வை
“உயிர் வாழ வெப்பம் மட்டும் போதுமா? காற்றும், உணவும் வேண்டுமே?” என்றான் நந்தன்
“குளிர்ந்த கடல் நீர் உயிர் வளி, கரியமில வாயு போன்ற வாயுக்களை தனக்குள் அதிக அளவில் வைத்திருக்கும். கடல் தரையை ஒட்டி பயணிக்கும் குளிர்ந்த கடல் நீர் கடல் ஆழத்தில் உள்ள மண்ணையும் சேர்த்து நகர்த்துவதால், நீர் போகும் இடங்களில் உள்ள அனைத்து இடங்களுக்கும் உயிர் வளியும், உணவும் கிடைக்கிறது” என்றார் தவ்வை
“காற்றோட்டம் எப்படி வெப்பநிலைய சீராக வைத்திருக்கிறது?” என்றாள் வானதி
“வெப்பம் மிகுந்த புவியின் மத்திய பகுதியில் இருந்து மேலே எழும்பும் சூடான காற்று குளிர்ந்த துருவங்களை நோக்கிப் பயணிக்கிறது. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் நிலவும் குளிரால் வெப்பத்தை இழந்த காற்றின் அடர்த்தி குறைகிறது. இதனால் துருவங்களை அடைவதற்கு முன்பே புவியின் தரையை நோக்கி குளிர்ந்த காற்று பயணிக்கிறது. இப்படி தொடர்ந்து பயணிக்கும் காற்று, மேகங்களை நகர்த்தி பல்வேறு இடங்களுக்கு மழைப்பொழிவை உண்டாக்குகிறது” என்றார் தவ்வை
“அப்படியானால் துருவங்களில் காற்று வீசாதா?” என்றான் நந்தன்
“துருவங்களுக்கும், மத்திய ரேகைப் பகுதிகளுக்கும் இருக்கும் வெப்ப வேறுபாடு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள காற்றை மிக வேகமாக நகர்த்துகின்றன. இவை மேலடுக்கு காற்றோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் வீசும் இக்காற்றோட்டங்கள் அப்பகுதிகளின் பருவமழையை, வானிலையத் தீர்மானிக்கின்றன” என்றார் தவ்வை
“நிலத்தில் இது போல அமைப்புகள் உள்ளதா?” என்றான் நந்தன்
“கடலைப் போலவே காடும் புவியின் இயக்கத்தில் பங்கு வகிக்கிறது. காடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஊரில் உள்ள தோப்பு, கோவில் காடுகளை பார்த்துவிட்டு ஓடைக்கரை வழியாக சோலக்காட்டுக்கு வாருங்கள்” என்றார் தவ்வை
Leave a comment