15. உயிரும் உணவும்

மறுநாள் காலையில் காலை உணவுக்கு முன்பே வானதியும், நந்தனும் மலையடிவாரத்தில் இருந்த தீவை அடைந்தனர். தவ்வை அங்கிருந்த சிறு பரிசலில் (வட்டமான படகு) அவர்களுக்காகத் தயாராக இருந்தார்.

இருவரும் பரிசலில் ஏறியதும் தவ்வை “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே;  உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனப் பாடிக் கொண்டே துடுப்பைக் கொண்டு படகை தீவை நோக்கிச் செலுத்தினார்.

“இந்த பாடலுக்கு என்ன பொருள்?” என்றாள் வானதி

“உணவு என்பது நீரும், நிலமும் சேர்ந்த கலவை” என்றார் தவ்வை.

“உணவு திடப் பொருள். அதில் எப்படி நீர் இருக்கும்?” என்றான் நந்தன்

“தாவரங்கள் நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன, ஒளிச்சேர்க்கையின் போது காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்குகின்றன. பிறகு நீரில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்களை எடுத்து கரியமில வாயு மூலக்கூறுடன் சேர்க்கின்றன”

6CO2 + 6H2O → C6H12O6 + 6O2

C6H12O6 (glucose) என்பதே நமது உணவின் அடிப்படை மூலக்கூறு. இந்தச் செயல்முறையின் விளைவாக உயிர்வளி மூலக்கூறுகள் கழிவாக வெளியிடப்படுகின்றன” என்றார் தவ்வை

“கரிமம் உணவுக்கு மிகவும் தேவையான ஒன்றா?”

“உணவுக்கு மட்டுமல்ல, நீரைப் போல அனைத்து உயிர்களுக்கும் கரிமம் மிகத் தேவையான ஒன்று. அனைத்து உயிர்களும் கரிமத்தாலும், நீராலும் ஆனவையே. கரிமம் திட வடிவில் நிலத்தில் அதிக அளவில் உள்ளது, காற்றில் கரியமில வாயுவாக குறைந்த அளவு உள்ளது.” என்றார் தவ்வை

இப்படி பேசிக் கொண்டே தீவில் இருந்த சிறு காட்டை அடைந்தனர். காட்டின் தரையை மரங்களின் இலைகள் மூடியிருந்தன. எங்கும் பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

இருவரும் தரையை உற்று நோக்கிய போது பல பூச்சிகள் இலைகளை உண்டு கொண்டிருந்தன. சில பூச்சிகள் இலைகளை உண்ணும் பூச்சிகளை துரத்திக் கொண்டிருந்தன. குரங்குகள், அணில், வௌவால், பறவைகள் உண்ட பழங்களின் மிச்சமும், விலங்குகளின் எச்சமும் தரையில ஆங்காங்கே இருந்தன அவற்றில் சிறு பூச்சிகளும் புழுக்களும் இருந்தன. கீழே விழுந்து கிடந்த பட்டுப் போன மரங்களை பூஞ்சைகளும் காளான்களும் மூடி இருந்தன. மரக்கிளையில் இருந்த பெரும் தேன்கூட்டில் இருந்து தேனீக்கள் போவதும், வருவதுமாக இருந்தன.

“உணவு உற்பத்தியில் தேனீக்கள் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன எனப் படித்துள்ளோம். ஆனால் அவை தாவரங்களின் மலர்களில் இருந்து தேன் தானே சேகரிக்கின்றன?” என்றான் நந்தன்

“தாவரங்கள் தேனீக்களுக்கு தேனை உணவாகக் கொடுத்து, தங்களது மகரந்த சேர்க்கைக்கு தேனீ, பல வகை வண்டுகள், குளவிகள், பல பறவைகள், வௌவால், குரங்கு என பல விலங்கினங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இது ஒரு ஒன்றுக்கொன்று சார்ந்த வாழ்க்கை முறை” என்றார் தவ்வை

“மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?” என்றான் நந்தன்

“பூக்கும் தாவரங்கள் தங்களது பூக்களில் உள்ள மகரந்தத்தை மற்ற பூக்களுக்கு விலங்குகளின் மூலம் கடத்துவது அயல் மகரந்தச் சேர்க்கையாகும். இதன் பிறகே பூ காயாகி, கனியாகிறது. அப்படிப்பட்ட கனியின் மிச்சத்தைத் தான் இந்தப் பூச்சிகள் உண்கின்றன” என்றார் தவ்வை

“ஏன் இந்தப் பூச்சிகள் அழுகிப் போன பழங்களை உண்கின்றன?” என்றான் நந்தன்

“நீங்கள் உண்ணும் உணவு இறுதியில் என்னவாகிறது?” என்றார் தவ்வை

“உயிர்களின் உடலுக்குள் செல்லும் உணவு வளர்சிதை மாற்றம் மூலம் உயிர்வளியுடன் சேரும் போது ஆற்றலாக மாறுகிறது. கழிவாக கரியமிலவாயு, நீர் மற்றும் திடக்கழிவு வெளியேறுகிறது” என்றாள் வானதி

“கரியமில வாயுவும், நீரும் மீண்டும் தாவரங்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படுகிறது” என்றார் தவ்வை

“திடக்கழிவு என்னாகும்?” என்றான் நந்தன்

“பூச்சிகள் உண்டது இந்தக் கழிவையே. இந்த மரத்தடியில் இருக்கும் தரையில் இதற்கு விளக்கமான பதில் இருக்கிறது” என்றார் தவ்வை

அங்கு சில வண்டுகள் காட்டுமாட்டின் சாணத்தைச் சிறு உருண்டைகளாக உருட்டித் தள்ளிக் கொண்டிருந்தன.

“இவை ஏன் சாணத்தை உருட்டுகின்றன?” என்றாள் வானதி

“காட்டு மாட்டின் திடக்கழிவே இவற்றின் உணவு. இதை உண்ட வண்டுகள் சிறிய அளவில் கரியமில வாயுவையும், சிறிது திடக்கழிவையும் வெளியிடும். அந்தக் கழிவு மீண்டும் ஒரு உயிரினத்துக்கு உணவாகும். சில நுண்ணுயிர்கள் தமக்கு உணவாகக் கிடைக்கும் கரிமத்தை மண்ணில் சேர்க்கின்றன. இதைப் போலவே தாவரக் கழிவுகளும் பல உயிரினங்களுக்கு உணவாகி இறுதியில் கரிமமாக மண்ணில் சேர்கிறது. இதுவே கழிவு சுழற்சி. தாவரங்களின் உணவு உற்பத்தியும், உயிரினங்களின் கழிவு சுழற்சியுமே புவியின் கரிம சுழற்சியாகும்” என்றார் தவ்வை”

“சாணி வண்டு இல்லாமல் போனால் சாணி மீண்டும் கரிமமாக மண்ணில் கலக்காதா?” என்றாள் வானதி

“கரிம சுழற்சியை சீராக வைத்திருக்கப் புவியின் உயிர்ப்பன்மையம் இன்றியமையாதது. இது இல்லையென்றால் கரிம சுழற்சி பெருமளவில் பாதிக்கப்படும்” என்றார் தவ்வை

“உயிர்ப்பன்மையம் என்றால் என்ன?” என்றான் நந்தன்

“நாளை என்னைச் சோலைக் காட்டில் உயிர்ப்பன்மையம் என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்” என்றார் தவ்வை

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started