வானதியும் நந்தனும் அடுத்த நாள் அதிகாலைக்கு முன்பே கிளம்பிவிட்டனர்.
புதர்க்காடு மிகவும் வறண்ட நிலம், அங்கு உண்ண எதுவும் கிடைக்காது என அவர்களின் தாயார் எச்சரித்ததால் கேழ்வரகு களி, மோர் இரண்டையும் சட்டிகளில் ஊற்றிக் கொண்டு, ஒரு குடுவையில் நீருடன் கிளம்பினர்.
புதர்க்காட்டில் எங்கு நோக்கினும் சில மரங்களும், வறண்ட புற்களும் அங்கங்கே இருந்தன. எங்கும் பசுமை இல்லை.
அப்போது ஒரு இனிமையான பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது“
தவ்வை அங்கு தான் இருக்க வேண்டும் என்று பாடல் வந்த திசையை நோக்கி இருவரும் ஓடினர். அங்கு வறண்டு போன சிறிய ஆற்றங்கரையில் இருந்த ஆலமரத்தடியில் தவ்வை அமர்ந்திருந்தார்.
“நீங்கள் பாடிய பாடலின் பொருள் என்ன?” என்றான் நந்தன்
“மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் என்பதே இதன் பொருள்” என்றார் தவ்வை.
“இடத்திற்கு ஏற்ற பாடல் தான். ஏன் இந்த இடம் மட்டும் வறண்டு, வெப்பமாக இருக்கிறது?” என்றாள் வானதி
“இங்கு மழைப்பொழிவு மிகவும் குறைவு. எப்போதாவது பெய்யும் மழையினால் இங்கு சில வறண்ட நிலத் தாவரங்கள் வாழ்கின்றன” என்றார் தவ்வை
“ஏன் இங்கு மட்டும் மழைப்பொழிவு குறைவு? மேலே போகும் நீராவி அனைத்து இடங்களுக்கும் மழையாகத் தானே பொழிகிறது?” என்றான் நந்தன்
“மேலே செல்லும் நீராவி குளிர்ந்தாலும் அது உடனடியாக மழையாகப் பொழியாது. சிறிய அளவி்ல் காற்றில் இருக்கும் தூசியுடன் ஒன்று சேரும் நீர்த்திவலைகள் வெண்மேகங்களாக மாறுகின்றன”
“வெண்மேகங்கள் மழையைக் கொண்டு வராதே?” என்றான் நந்தன்
“உயரத்தில் இருக்கும் வெண்மேகங்கள் உள்வரும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இது புவியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது” என்றார் தவ்வை
“பிறகு எப்படித் தான் மழை பெய்கிறது?” என்றாள் வானதி
“காற்றின் வெப்பநிலை குறையும் போது நீர்த்திவலைகள் அதிக அளவில் தூசிகளைச் சுற்றி உருவாகின்றன. இவை தான் தாழ்ந்த உயரத்தில் உருவாகும் மழை மேகங்கள். இவை கருப்பாக இருக்கும்” என்றார் தவ்வை
“மழை பெய்யும் போது சிறிதளவு இருள்வது இதனால் தானா?
“ஆம், இந்த மேகங்களில் உள்ள நீர்த்திவலைகளின் அடர்த்தி அதிகரிக்கும் போது கருமை அதிகரிக்கும். அவற்றில் உள்ள நீர்திவலைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நீர்த்துளிகளாக மாறி எடை தாங்காமல் கீழே விழுகின்றன. இது தான் மழை. இது அனைத்து இடத்துக்கும் சமமான அளவில் கிடைப்பதில்லை” என்றார் தவ்வை
“ஏன் அப்படி நடக்கிறது?”
“மழைக்காலங்களில் காற்றால் நகர்த்தப்படும் கருமேகங்கள் இந்த மலையின் தெற்கு பகுதியில் மோதும் போது மேலே உயர்ந்து, வேகமாக குளிர்ந்து அங்கேயே மழையாக கொட்டிவிடுகிறது.”
“ஈரம் குறைந்த காற்று மட்டுமே மலையின் வடக்குப் பகுதிக்கு வருகிறது. இதனால் இப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவு” என்றார் தவ்வை.
“மழை எப்போதும் இங்கே பெய்யாதா?” என்றான் நந்தன்
“எப்போதாவது மிக அதிக ஈரப்பதத்துடன் வரும் காற்று மலையைத் தாண்டி இங்கு மழையை கொண்டு வருகிறது. அப்போது பெய்யும் மழையால் தரையில் உள்ள வெப்பமும் குறைகிறது”
“இப்படி நீர் புவியின் வெப்பத்தை நீராவி மூலமும், மழையின் மூலமும் பராமரிக்கிறது” என்றார் தவ்வை
“மலைகளே இல்லாத இடங்களின்லும் மழை பெய்கிறதே?” என்றாள் வானதி
“காற்றில் நீராவியின் அளவு அதிகரிக்கும் போது மேகங்கள் சிறிது குளிர்ந்தாலும் நீர்த்திவலைகள் உருவாகி மழை பொழிகிறது.” என்றார் தவ்வை
அப்போது தீடீரென்று அடித்த காற்றினால் கூடிய கருமேகங்கள் மழையைக் கொட்டத் தொடங்கின. காட்டாற்றில் நீர் வெகு வேகமாக ஓடத் தொடங்கியது. இருவரும் தவ்வையை பயத்துடன் நோக்கினர்.
“கவலை வேண்டாம் குழந்தைகளே, இப்போது பெய்யும் மழை பருவம் தவறி மிக அதிகமாகப் பெய்கிறது. ஆனால் அதிக நேரம் பெய்யாது” என்றார் தவ்வை
“நேற்றைய கேள்விக்கான விடை மேகம் தானே? இப்போது தான் விடை புலப்பட்டது” என்றான் நந்தன்
“ஆம் மேகம் தான்” என்றார் தவ்வை
“இந்த மலையைச் சுற்றியுள்ள பல இடங்களில் மழை பெய்ய நீராவி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த மலையச் சுற்றி ஆறும், ஏரியும், நீர் நிறைந்த வயல்கள் மட்டுமே உள்ளன” என்றாள் வானதி
“நிலத்தில் உயிர்கள் வாழ மழை தேவை. அந்த மழையை உருவாக்க கடல் தேவை. கடலைப் பற்றி நாளை ஏரிக்கரையில் உள்ள மணல் திட்டுக்கு இக்கேள்விக்கான விடையுடன் வாருங்கள். கடற்கரையில் வளரும் பூ, மழைநீரில் மடியும் பூ. அது என்ன?” எனக் கூறி விடை பெற்றார் தவ்வை
Leave a comment