1. தவ்வை

12 வயதான நந்தனும் 16 வயதான வானதியும் பெரும் மலை காட்டின் அருகே இருக்கும் சிற்றூரில் வளர்ந்திருந்தாலும் பெரு மரங்களையோ, அடர்ந்த காட்டையோ பார்த்ததில்லை. பச்சை பசேலென்று இருக்கும் காட்டை, மலை முகடுகளைப் பார்க்க இருவருக்கும் பேராவல்.

ஒரு நாள் தொலைவில் உள்ள ஒரு மலையில் இருக்கும் காட்டை பார்க்கலாம் என இருவரும் கிளம்பினர். பெரு மழை பெய்து முடித்திருந்தது. இப்போது அந்த மலை பச்சை போர்வை போர்த்தியது போல அவர்களுக்கு காட்சியளித்தது. ஆங்காங்கே வெள்ளி கம்பிகள் உருகி ஓடுவது போல் பல அருவிகள் மலைச்சாரலின் பாறைகளில் வழிந்து ஓடி கொண்டு இருந்தன.

“இயற்கை என்பது பசுமை மாறாத காடுகள் தான். இந்தச் சின்னக் காடே இவ்வளவு அழகாக இருக்கிறது” என்றாள் வானதி.

“ஆம் அக்கா, பெரும் காடுகள் இதை விடப் பசுமையாக இருக்கும். அங்கு உருவாகும் ஓடைகளில் இருந்து தான் ஆறுகள் உருவாகின்றன. அதை எல்லாம் நாம் சென்று பார்த்து வர வேண்டும்” என்றான் நந்தன்.

இப்படிக் காட்டின் பெருமையைப் பேசிக் கொண்டே காட்டின் உட்பகுதிக்குள் சென்றனர். அப்போது யாரோ ஒருவர் மெலிதாக சிரிக்கும் சத்தம் கேட்டது. நந்தனும், வானதியும் சிரிப்பொலியை கேட்டதும் சிறிது பயத்துடன் சுற்றிலும் பார்த்தனர்.

ஒரு பெரிய வாகை மரத்தின் பின்னால் மெல்லிய சிரிப்பொலியும், இனிமையான பாட்டும் கேட்டது. பயமும், வியப்பும் கலந்த நடையில் மெதுவாக அந்த பெரு மரத்தை நோக்கி இருவரும் நடந்தனர். அங்கிருந்த பெரு மரத்தடியில் ஒரு கல் திட்டையின் மேல் பெண் ஒருவர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார்.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்தமயக்கம்உலகம்ஆதலின்

சிறார் இருவருக்கும் அது ஒரு தமிழ்ப் பாடல் எனப் தெரிந்தது ஆனால் அந்த பாடலின் பொருள் என்னவென்று விளங்கவில்லை. இருவரும் செய்வதறியாது அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் முகம் மிகவும் பழகிய முகம் போல் இருந்தாலும் அவர் யாரென்று தெரியவில்லை.

காலடி சத்தம் கேட்டு பாட்டை நிறுத்திய அந்த பெண் இந்த சிறுவர்களைப் பார்த்து புன்சிரிப்போடு, அருகில் வரச் சொல்லி தலையசைத்தார். நந்தன் வானதியைப் பார்த்து ” இவரை நாம் இதற்கு முன் இங்கு பார்த்ததே இல்லையே, யாராக இருக்கும்?” என்றான்.

“நான் சிறிது நேரத்துக்கு முன் தான் இங்கு வந்தேன், என் பெயர் தவ்வை” என்றார் அப்பெண்.

“தவ்வை என்ற பெயரை நாங்கள் கேட்டதே இல்லையே… நீங்கள் எந்த ஊர்? எதற்காக இந்தக் காட்டின் நடுவே தனியாக உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறீர்கள்? இது என்ன பாடல்?” என்றாள் வானதி.

“அப்பப்பா! எத்தனை கேள்விகள்!…. வாருங்கள் ,என் அருகில் வந்து அமருங்கள். நீங்கள் இந்த காட்டைப் பற்றிப் பேசியது என் காதில் விழுந்தது. அதைப் பற்றி எனக்கும் சிறிது தெரியும். அதனால் தான் உங்களிடம் சிறிது நேரம் பேசலாம் என்று இங்கு வந்தேன். இந்த உரையாடலின் முடிவில் என்னைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்வீர்கள். தொல்காப்பியத்தில் இருக்கும் ஒரு பாடலை தான் நான் பாடிக் கொண்டிருந்தேன். அதன் பொருள் ஐம்பெரும் பொருள்களாகிய நிலம், தீ (வெப்பம்), நீர், வளி (காற்று), விசும்பு (அண்டவெளி) என்ற ஐந்தும் கலந்து இருப்பதே” இவ்வுலகம் என்றார் தவ்வை.

“பெரும் காடுகள் தானே இயற்கை. அதைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததைக் கூறுங்கள், எனக்கு காடுகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்றான் நந்தன்.

“இயற்கை என்பது அளவிட முடியாதது, நம் கற்பனைக்கு எட்டாதது. அதில் ஒரு சிறு பகுதியே நாம் வாழும் இந்த புவி. இப்புவியின் சிறு அங்கமே நீங்கள் காணும் பசுமையான காடுகள். நீலக்கடல், மணல் நிறைந்த பாலை, பனி சூழ்ந்த மலைகள் என அனைத்தும் இயற்கையே. ஏன், நீங்களும் இயற்கையின் ஒரு அங்கமே” என்றார் தவ்வை.

“நாம் வாழும் புவியைப் பற்றி பள்ளிகளில் மட்டுமே சிறிய அளவில் படிக்கிறோம், பிறகு அதை பற்றி மறந்தும் விடுகிறோம். நீங்கள் புவியைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கூற முடியுமா?” என்று ஆர்வமாய் கேட்டாள் வானதி.

“கண்டிப்பாக சொல்கிறேன். ஆனால் என் கேள்விக்கு நீங்களும் பதிலளிக்க வேண்டும்” என்றார் தவ்வை.

சரி என்பது போல் தலையசைத்தனர் இருவரும். “காணாமல் பூ பூக்கும், கண்டு காய் காய்க்கும் அது என்ன?” என்றார் தவ்வை.

Published by

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started